ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லா வழக்கு தொடர்ந்துள்ளார். இருவருக்கும் இடையே தொடர்ந்து சட்ட ரீதியான மோதல் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில், தன்னுடைய மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் ஜாய் கிறிஸ்டில்லா கருத்துக்கள் பதிவிடுவதால் தனக்கு 12 கோடி வர்த்தக இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் பாகசாலா நிறுவனம் குறித்து பதிவுகள் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
அந்த மனு ஏற்கனவே நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாய் கிறிஸ்டில்லா தரப்பு வாதிடும்போது, சமூக வலைதளங்களில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குறித்து ஜாய் கிரிஸ்டில்லா எந்த பதிவும் போடுவதில்லை. அதோடு, 12 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறும் நிலையில் கேட்டரிங் ஆடர் எப்போது புக் செய்தார்கள்? எப்போது ரத்து செய்யப்பட்டது? எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது என்று எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. அதனால் இதற்கும் ஜாய் கிறிஸ்டில்லா கருத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். அதையடுத்து நீதிபதி என். செந்தில்குமார், மாதம்பட்டி ரங்கராஜ் தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், அந்த வழக்கு குறித்து இன்று அவர் தீர்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்துக்கு எதிராக ஜாய் கிறிஸ்டில்லா சோசியல் மீடியாவில் பதிவிடுவதாக தொடர்ந்த அந்த வழக்கை மறு விசாரணை செய்யாமல் அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.