உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு

நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு

கடந்த 2017 பிப்ரவரியில் பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பில் இருந்து திரும்பும் போது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அது வீடியோவாக எடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த கடத்தலில் பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதில் முதன்மை குற்றவாளியாக கார் கடத்தலில் நேரடியாக ஈடுபட்ட பல்சர் சுனில் என்பவனும் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் சேர்க்கப்பட்டனர். பின்னர் அதே வருடம் ஜூலை மாதம் நடிகர் திலீப் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 88 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

சம்பவம் 2017ல் நடந்திருந்தாலும் 2020 ஜனவரியில் இருந்து தான் இந்த வழக்கு குறித்த விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சூடு பிடித்தது. இடையில் சில தடங்கல்கள் காரணமாக ஆமை வேகத்தில் நகர்ந்த இந்த வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியாகும் என எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !