என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம்
ஜி5 ஓடிடியில் வெளியாக உள்ள 'ரேகை' என்ற வெப்சீரிசை தினகரன் இயக்கி உள்ளார். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் 1995ல் எழுதிய 'உலகை விலை கேள்' என்ற நாவல்தான் இந்த வெப்சீரீஸ் கதை. சென்னையில் நடந்த இந்த வெப்சீரிஸ் விழாவில் கலந்து கொண்டு ராஜேஷ்குமார் பேசியது: நான் 1500க்கும் அதிகமான நாவல்கள், 2 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதினாலும் எனக்கு சினிமா அதிகம் செட்டாகவில்லை. ஒரு சிலர் வந்து பேசியிருக்கிறார்கள். சில படங்களுக்கு கதை கொடுத்து இருக்கிறேன். ஆனாலும், சென்னைக்கு வாங்க, எங்களுடன் சில நாட்கள் இருங்க, கதை குறித்து விவாதிக்கணும்னு சொல்வாங்க. அது சரிப்பட்டு வரவில்லை.
இப்போது கூட நடிகர் சந்தானம் என்னிடம் அடுத்த படத்துக்கு கதை குறித்து விவாதித்து சென்றுள்ளார். அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கி உள்ளேன். என்னுடைய பல கதைகள், கரு பல சினிமாக்களில் வந்துள்ளன. அதற்காக நான் கேஸ் போடவில்லை. காரணம், நான் கேஸ் போட்டால் கோவையில் இருந்து சென்னைக்கு வந்து அலையணும். அந்த கேஸ் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும். என் லாயருக்கு பீஸ், தங்க இடம், பிளைட் டிக்கெட் என அனைத்தையும் ஏற்பாடு செய்து தரணும். கடைசியில், உங்களை மாதிரியே, அந்த இயக்குனரும் யோசித்து இருக்கலாமேனு தீர்ப்பு வரலாம்.
அதனால், அன்னதானம் மாதிரி, நான் கதை தானம், விஷய தானம் செய்து இருக்கிறேன் என நினைத்துக்கொள்வேன். சமீபத்தில் என் மனைவியுடன் ஒரு படம் பார்த்தேன். அப்போது பின்னால் இருந்த சிலர் டேய், இது ராஜேஷ்குமார் கதை கரு. நான் படித்து இருக்கிறேன் என கமென்ட் அடித்தார். எல்லாருக்கும் எல்லாம் தெரியும். அது எனக்கு போதும். தவிர, என் கதையை காப்பி அடித்து படம் எடுத்தவர்கள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. அந்த காலத்தில் என் கெட்அப் பார்த்து இயக்குனர் மணிவண்ணன் உட்பட சிலர் நடிக்க அழைத்தார்கள், எனக்கு ஆர்வம் இல்லை. இப்போதும் என்னிடம் ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. ரஜினி, கமல் உட்பட முன்னணி நடிகர்களுக்கும் என்னிடம் கதை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.