மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம்
சினிமாவைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமைகளில் படங்கள் வெளியாவது பல வருடங்களாக வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் சமீப வருடங்களாகத்தான் ஒரு நாள் முன்கூட்டியே வியாழக்கிழமை பலர் தங்களது படங்களை ரிலீஸ் செய்யும் புதிய பழக்கத்தை கடைபிடிக்க துவங்கியுள்ளனர். சனி, ஞாயிறு சேர்த்து நான்கு நாட்களில் வசூலை அள்ளி விட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம். அப்படி இருக்க மலையாளத்தில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படத்தை சென்டிமென்ட் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ் செய்வதாக அறிவித்திருக்கிறார். மலையாள திரையுலகில் இப்படி ஒரு படம் ஞாயிறன்று வெளியாவது இதுவே முதன்முறை என்கிறார்கள்.
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் கூட வரவேற்பை பெற்ற படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்த படத்தில் குணா குகைக்குள் தவறி விழுந்த நடிகராக நடித்தவர் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் 'பொங்கலா'. இரண்டாயிரத்தில் கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி இந்த படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை ஏபி பினில் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 30 (ஞாயிறு) ரிலீஸ் ஆக இருக்கிறது. பட தயாரிப்பாளர்கள் தீபு ஜோஸ் மற்றும் அனில் பிள்ளை ஆகியோரின் பெர்சனல் சென்டிமென்ட் காரணமாகவே வெள்ளி, சனி நாட்களை புறம் தள்ளிவிட்டு இந்த படம் ஞாயிற்றுக்கிழமையில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.