'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி
மோகன் ஜி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் படம் 'திரௌபதி 2'. இதில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோ. இந்த படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் ரக்ஷனா நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் 'எம்கோனே' என்ற முதல் பாடல் இன்று வெளியாவதாக அறிவித்துள்ளனர்.
இந்த 'எம்கோனே' பாடலை சின்மயி பாடியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இயக்குனர் மோகன் ஜி, 'திரெளபதி' படத்தை இயக்கியபோது, அதில் பல காட்சிகள் சாதிய பெருமை பேசும் விதமாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்படியிருக்கையில், பெண் சுதந்திரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தட்டிக்கேட்கும் சின்மயி, பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான சுயசாதி திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர் மோகன்.ஜி திரைப்படத்திற்கு ஏன் பாடினார்? என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து அந்த பாடலை பாடியதற்காக சின்மயி மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டதாவது: 'எம்கோனே' பாடல் குறித்து எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன். இசையமைப்பாளர் ஜிப்ரானை எனக்கு 18 ஆண்டுகளாகத் தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இப்பாடலைப் பாடக்கேட்டதால் எப்போதும் போல் சென்று பாடினேன். அப்போது, ஜிப்ரான் அங்கு இல்லை என நினைக்கிறேன்.
எப்படிப் பாட வேண்டும் என்கிற குறிப்பு இருந்ததால் அதை பாடி முடித்ததும் கிளம்பினேன். இந்தப் பாடலைச் சுற்றியுள்ள விஷயங்களை நான் இப்போது தான் அறிந்துகொள்கிறேன். முன்பே இதுப்பற்றி தெரிந்திருந்தால், என் கொள்கைகளுக்கு முரண்பட்டவை என்பதால் நான் ஒருபோதும் இதில் இணைந்திருக்க மாட்டேன். இதுதான் முழு உண்மை. பல்வேறு பாடல்களை பாடும் போது அது எந்த படத்திற்காக என்பதை கூட இசையமைப்பாளர்கள் தெரிவிக்கமாட்டார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.