உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி”

பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி”


கலைத்துறையில் ஒரு நடிகராக நுழைந்து, கதை வசனகர்த்தாவாக உயர்வு பெற்று, பின் இயக்குநர் என்ற அவதாரம் எடுத்து, எண்ணற்ற சமூக, புராண, இதிகாச திரைக்காவியங்களைத் தந்து, 'இறையருட் செல்வர்' என கலையுலகினரால் அன்பாகவும், மரியாதையாகவும் அழைக்கப்பட்டவர்தான் இயக்குநர் ஏ பி நாகராஜன்.

“நான் பெற்ற செல்வம்”, “சம்பூர்ண ராமாயணம்”, “நீலாவுக்கு நெறஞ்ச மனசு”, “தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை”, “அல்லி பெற்ற பிள்ளை”, “பாவை விளக்கு”, என 1950களில் இயக்குநர் கே சோமு இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அத்திரைப்படங்களின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவராக இருந்திருக்கின்றார் இயக்குநர் ஏ பி நாகராஜன். அந்த வரிசையில் இயக்குநர் கே சோமு இயக்கத்தில் இவர் கதை வசனம் எழுதி, பெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படமாக வெளிவந்ததுதான் “மக்களைப் பெற்ற மகராசி”.

1957ல் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். கனல் தெறிக்கும் வசனங்களைத் தனது கணீர் குரலால் கம்பீரமாகப் பேசி நடித்து வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இத்திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்டு, விவசாயத் தொழில் புரியும் ஒரு கொங்கு மண்டல இளைஞனாக, விவசாயியாக நடித்திருந்ததோடு, ஏனுங்க, ஏதுங்க என்று படம் முழுக்க கொங்கு தமிழ் பேசி நடித்திருந்தைக் கண்டு ரசிகர்கள் அதிசயித்துத்தான் போயிருந்தனர்.

மேலும் “மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி, வயக்காட்ட உழுதுபோடு சின்னக்கண்ணு” என்று ஆரம்பமாகும் பாடலில், ஆத்தூரு கிச்சிலி சம்பா நெல்லை விதைப்பது, அறுப்பது, அளப்பது, அதன்பின் அந்தப் பொதியை வண்டியிலே ஏற்றி, பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு விற்கும் வரை முழுப் பாடலும் கொங்கு தமிழிலேயே அமைத்து, ஒரு அற்புதத்தையும் நிகழ்த்தியிருப்பர் படக்குழுவினர். பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜன் குரலில் இடம் பெற்றிருந்த அந்தப் பாடல் இன்றுவரை பலரது விருப்பப் பாடலாகவும் இருந்து வருகின்றது.

இயக்குநர் கே சோமு இயக்கிய இத்திரைப்படத்தில், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பி பானுமதி, பி கண்ணாம்பா, எம் என் நம்பியார், எம் என் ராஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கே வி மகாதேவன் படத்திற்கு இசையமைத்திருந்தார். நடிகர் வி கே ராமசாமியும், இயக்குநர் ஏ பி நாகராஜனும் இணைந்து, “விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்” என்ற பதாகையின் கீழ் தயாரித்த முதல் திரைப்படமாகவும் வெளிவந்த இத்திரைப்படம்தான் முழுக்க, முழுக்க வட்டார மொழி வழக்கில் வசனம் பேசி எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமைக்கும் உரியதாக இன்றும் இருந்து வருகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !