அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
இந்தியாவின் தேசப் பற்றுக்காக 'வந்தே மாதரம்' பாடலை உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் பற்றுக்காக 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடலை உருவாக்கினார். இதேபோன்று தற்போது அபுதாபியில் உள்ள அமீரகத்திற்காக 'ஜமால் அல் இத்திகாத்' என்ற சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
அமீரகத்தின் நிறுவன தந்தை என போற்றப்படும் முன்னாள் அதிபர் மறைந்த ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யானின் தொலைநோக்கு பார்வையில் விளைந்த சாதனைகள், நாட்டின் வளர்ச்சி, புதுமை மற்றும் அமீரகத்தின் மதிப்புகளினால் உருவாக்கப்பட்ட அடையாளத்தை முன்னிலைப்படுத்தி இந்த இசைகோர்வை உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அமீரக தேசிய தின விழாவில் இந்த பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள் கதீஜாவுடன் கலந்து கொண்டார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது ''இந்த பாடல் உருவாக்கும் பணி சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ஆனால் உலகளாவிய பதற்றங்கள், போர்கள் காரணமாக பாடலை வெளியிட தாமதமானது. இந்த மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என விரும்பினோம். இப்போது அதற்கான சரியான நேரமாக இது உள்ளது. அன்பு, பெருமை மற்றும் முன்னேற்றத்தின் கொள்கைகளை பேசும் இப்பாடல், வளமான மனிதர்களின் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறது'', என்றார்.