உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா
நடிகை சமந்தா முன்னாள் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு 'தி பேமிலி மேன்' வெப் தொடரில் நடித்தபோது அதன் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிதிமொருவை காதலித்தார். நெருக்கமாக பழகி வந்த இருவரும் கோவை ஈஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆங்கிலோ இந்திய பெண்ணான சமந்தா, ஈஷா யோகா மையத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். யோகாகுரு ஜக்கி வாசுதேவின் தீவிர பக்தை. அவரது யோசனைப்படியே ஈஷாவில் கடைபிடிக்கப்படும் 'பூதசுத்தி விவாஹா' முறைப்படி சமந்தா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சமந்தாவிற்கு ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பூதசுத்தி விவாஹ முறை பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் “லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் 'பூத சுத்தி விவாஹா' திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது.
இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.