அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள்
ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வெளிவருகிறது என்பதை பல சமயங்களில் சில நாட்களுக்கு முன்புதான் தெரிந்து கொள்ள முடிகிறது. சில படங்களை வெளியான பிறகும் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. எந்த விதமான புரமோஷனும் இன்றி, செய்திகளும் இன்றி கூட படங்களை வெளியிடுகிறார்கள். சின்னப் படங்களின் நிலைமை இப்படியிருக்க முன்னணி நடிகர்களின் படங்கள் கூட அறிவிக்கப்பட்ட தேதிகளில் வெளியிடாமல் திடீரென தள்ளி வைத்துவிடுகிறார்கள்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள 'வா வாத்தியார்' படத்தை இந்த வருடத் துவக்கத்திலேயே வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். அது அப்படியே தள்ளிப் போய் தள்ளிப் போய் டிசம்பர் 5க்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்பின் டிசம்பர் வெளியீடு என்று தேதி குறிப்பிடாமல் மாற்றினார்கள். இன்று டிசம்பர் 12ம் தேதிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
அதுபோல, கிறிஸ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா நடித்துள்ள 'ரெட்ட தல' படத்தை முதலில் டிசம்பர் 18 வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். தற்போது டிசம்பர் 25க்கு மாற்றியுள்ளார்கள். டிசம்பர் 18ல் 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படத்துடன் போட்டி போட வேண்டாமென தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் வெளியீடும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17க்கு இருந்தது. அன்றைய தினம் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படத்தை ஏட்டிக்குப் போட்டியாக அறிவித்து வெளியிட்டார்கள். அதனால், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை டிசம்பர் 18க்கு தள்ளி வைத்தார்கள்.
தமிழ் சினிமாவில் புதிய படங்களின் வெளியீட்டிற்கு ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் போய்விட்டது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இணைந்து பழையபடி ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்து படங்களின் தேதிகளை உறுதி செய்ய வேண்டும் என்ற குரல் திரையுலகில் உள்ளது. ஆனால், அதை முன்னெடுக்க எந்த சங்கங்களும் வராமல் இருப்பது ஆச்சரியம்தான்.