அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி
புச்சிபாபு சனா இயக்கத்தில், வைஷ்ணவ் தேஜ், விஜய் சேதுபதி நடித்து 2021ல் தெலுங்கில் வெளிவந்த 'உப்பெனா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. அந்தப் படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் கிரித்திக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன.
தமிழ் இயக்குனரான லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவான 'தி வாரியர்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானர் கிரித்தி. ஆனால், அந்தப் படம் இரண்டு மொழிகளிலுமே தோல்வியைத் தழுவியது. அதற்கடுத்து, மற்றுமொரு தமிழ் இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நாயகனாக நடித்து தமிழ், தெலுங்கில் உருவான 'கஸ்டடி' படத்தில் கதாநாயகியாக நடித்தார் கிரித்தி. அந்தப் படமும் இரண்டு மொழிகளிலுமே தோல்வியைத் தழுவியது.
இருந்தாலும் கிரித்திக்கு தமிழில் வாய்ப்புகள் வந்தன. கார்த்தி கதாநாயகனாக நடித்து டிசம்பர் 12ல் வெளியாக உள்ள 'வா வாத்தியார்' படத்திலும், பிரதீப் ரங்கநாதன் நடித்து டிசம்பர் 18ல் வெளியாக உள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்திலும் கிரித்தி தான் கதாநாயகி. அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. தமிழில் அவர் இதற்கு முன் நடித்த இரண்டு படங்கள் தோல்வியான நிலையில் வர உள்ள இரண்டு படங்களிலும் அவர் வெற்றியைப் பதிவு செய்தால் தொடர் வாய்ப்புகள் வரலாம்.
ரவிமோகன் நடித்து வர உள்ள 'ஜீனி' படத்திலும் கிரித்தி தான் கதாநாயகி என்பது கூடுதல் தகவல். இந்தப் படங்கள் தவிர, தமிழ், தெலுங்கில் வேறு எந்தப் படங்களிலும் கிரித்திக்கு தற்போது படங்கள் இல்லை.