சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு
போயபதி ஶ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த அகண்டா 2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் டிசம்பர் 5ல் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி சென்னைக்கு வந்த பாலகிருஷ்ணா பேசியதாவது : நான் பிறந்தது சென்னை தான். சென்னை எனக்கு ஜென்ம பூமி. நான் இங்குதான் பிறந்தேன். ஆந்திரா என் ஆத்ம பூமி, தெலுங்கானா கர்மபூமி. என்னுடைய அப்பா என்டிஆர் தனது வாழ்க்கையின் இங்கு தான் ஆரம்பித்தார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். குறிப்பாக எம்ஜிஆர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழக மக்களுக்கு தண்ணீர் திறந்து விட்டவர். தெலுங்கு கங்கை திட்டத்தை உருவாக்கினார். எனக்கும் தமிழக மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இந்த திரைப்படத்தை 130 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறோம். ஜார்ஜியா, மத்திய பிரதேசம், ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படம் இந்து தர்மத்தை பற்றி உலகத்திற்கு சொல்ல இருக்க கூடிய படம். இயந்திரமாக ஓடி கொண்டு இருக்க கூடிய நபர்கள் இந்த படத்தினை பார்க்க வேண்டும். நிச்சயமாக இந்த படத்தின் மூலமாக நமது கலாச்சாரம் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு புரியும்.
சினிமாவில் நான் 50 ஆண்டுகளாக கதாநாயகனாக நடித்து வருகிறேன். இது எனக்கு கடவுளும் என்னுடைய அப்பாவும் கொடுத்த வரம். இந்த படமானது டிசம்பர் 5ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. அனைவரும் அதனைப் பார்த்து வெற்றியடைய செய்ய வேண்டும். சனாதன தர்மத்தின் உயர்வை இந்த படம் வலியுறுத்துகிறது. தர்மத்துக்கு ஆதரவாக, அநீதிகளுக்கு எதிராக செயல்படுவதே சனாதன தர்மம். இளைஞர்களுக்கு அதை இந்த படம் சொல்லிக் கொடுக்கும். சனாதன தர்மம் என்பது வரும் தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும். அதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது அகண்டா திரைப்படம். இது அடுத்த பாகம். எனக்கும் இந்த இயக்குநருக்கும் இது 4வது படம். இது எல்லாமே சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. நான் இயக்குநருடன் அதிகம் கதை கேட்க மாட்டேன். எங்களுக்குள் ஒரு ஒத்த அலைவரிசை உள்ளது. அதனால் தான் படம் 130 நாட்களில் முடிந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் தெய்வ சக்தி தான் காரணம். இந்த படம் ஒரு என்சைக்லோபீடியா, இதை அனைவரும் பார்க்க வேண்டும். அகண்டா தொடங்கி வரிசையாக 4 ஹிட் கொடுத்து விட்டேன். 5வதாக அகண்டா 2 வருகிறது
இவ்வாறு பாலகிருஷ்ணா பேசினார்.