பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல்நல பிரச்சனையால் இன்று (டிச.,04) காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் மா சுப்ரமணியம், மதிமுக.,வின் வைகோ ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
நடிகர்கள் சிவகுமார், சூர்யா, பார்த்திபன், மோகன் ராமன், ராட்சசன் சரவணன், டிவி வரதராஜன், செல் முருகன், பிரமிடு நடராஜன், ஒய்ஜி மகேந்திரன், ஈஸ்வரி ராவ், விஷால், விக்ரம் பிரபு, புனிதா பிரபு, சின்னி ஜெயந்த், கருணாஸ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனர்கள் விசி குகநாதன், வசந்த் சாய், எஸ்பி முத்துராமன், பி வாசு, தயாரிப்பாளர்கள் முரளி ராமன், விஷன் டைம் ராமமூர்த்தி, விஜயா புரொடக்ஷன்ஸ் விஸ்வந்தா ரெட்டி, கேடி குஞ்சுமோன், தனஞ்செயன், முரளி ராமசாமி, சவுந்திர பாண்டியன், கல்யாணம், ஒளிப்பதிவாளர் கேஎஸ் செல்வராஜ், பெப்சி விஜயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சிவகுமார்
எனக்கு அடுத்த தலைமுறையான சூர்யாவிற்கு ‛பேரழகன், அயன்' போன்ற படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம். சூர்யாவிற்கு படம் செய்யும் பொழுது சூர்யாவிற்கு என்ன சம்பளம் கேட்கிறார்களோ அதை கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். இரண்டு நாளுக்கு ஒருமுறை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார், நாங்கள் அரை மணி நேரம் பேசுவோம். தமிழகத்தில் ரஜினி, கமலுடைய அதிகமான ஹிட் படங்களை ஏவிஎம் தான் தயாரித்தது.
பார்த்திபன்
ஏவிஎம் என்ற மூன்று எழுத்து மாதிரி பணிவு, பண்பு, ஒழுக்கம் இது எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்தமான உருவம் ஏவிஎம் சரவணன். அவருக்கான மரியாதை என்றும் குறையாது. இதற்கு காரணம் அவர் மட்டுமல்ல, அவரது தந்தை மெய்யப்ப செட்டியாரும் தான். என்னை மாதிரி கலைஞர்களுக்கு அவர் கடவுள் மாதிரி. ஏவிஎம் தொடர்ந்து படங்கள் தயாரிக்கனும், அதில் அவருக்கு அஞ்சலி கார்டு போடணும் என அவரது குடும்பத்தாரிடம் சொல்லி உள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.