இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன்
உழைப்பு, திட்டமிடல், விடாமுயற்சி, பணிவு என்ற இந்த நான்கும் ஒருங்கே அமையப் பெற்று, தனது தந்தை ஏவி மெய்யப்ப செட்டியார் வகுத்து தந்த வழியிலேயே பயணித்து, 'ஏவிஎம்' என்ற அந்த மூன்றெழுத்து கனவுலக கலைக் கூடத்தை கண்ணும் கருத்துமாக கட்டிக் காத்து, கடல் கடந்தும் அதன் பெருமைகளை எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்களில் முதன்மையானவர் தான் ஏவிஎம் சரவணன்.
இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் ஏவிஎம் என்ற அந்த மாபெரும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உரியவர் என்ற எந்த ஒரு படாடோபமும் இன்றி, பார்ப்போரின் கண்களில் என்றும் பணிவானவராகவே வாழ்ந்து இன்று மறைந்துவிட்டார் சரவணன். 1939, டிசம்பர் 3ல் பிறந்தார் சரவணன். தன்னுடைய 18 வயதில் ஏவிஎம் ஸ்டூடியோவிற்குள் காலடி எடுத்து வைத்தார். ஸ்டுடியோ நிர்வாகம், தயாரிப்பு, விநியோகம், தியேட்டர் வெளியீடு என எல்லா துறைகளிலும் பணியாற்றினார். தந்தை மெய்யப்ப செட்டியார் உடனே பயணித்து சினிமா தொடர்பான விஷயங்களை கற்றுக் ஏவிஎம் எனும் ஆலமரத்தை பெரிய விருச்சமாக மாற்ற உறுதுணையாக இருந்தார்.
1958ல் 'மாமியார் மெச்சிய மருமகள்' படம் மூலம் ஆரம்பித்த அவரது திரைப்பயணம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும், 100க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்க துணை நின்றார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்எஸ்ஆர், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என அன்றைய அனைத்து முன்னணி நாயகர்களையும் தங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க வைத்து, எண்ணிலடங்கா வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த ஏவிஎம், 1972ம் ஆண்டு வெளிவந்த “காசேதான் கடவுளடா” என்ற திரைப்படத்திற்குப் பின் தமிழில் படங்கள் ஏதும் தயாரிக்காமல் ஒரு நீண்ட இடைவெளியைத் தந்திருந்தது.
தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, ஏவிஎம் சரவணன் இயக்குநர் எஸ்பி முத்துராமனை அழைத்து, தனது சகோதரர்களுடன் இணைந்து தமிழில் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கப் போவதாக சொன்னதன் விளைவுதான் “முரட்டுக் காளை” என்ற மாபெரும் வெற்றித் திரைப்படம் உருவானது. ஏவிஎம் என்ற பதாகையின் கீழ் நடிக்க வேண்டும் என்றிருந்த நடிகர் ரஜினியின் கனவும் நிறைவேறியது இத்திரைப்படத்தின் மூலமாக. இதனைத் தொடர்ந்து “போக்கிரி ராஜா”, “பாயும் புலி”, “நல்லவனுக்கு நல்லவன்”, “மிஸ்டர் பாரத்”, “மனிதன்”, “ராஜா சின்ன ரோஜா”, “எஜமான்”, “சிவாஜி” என ரஜினி திரைப்படங்களும், “சகலகலா வல்லவன்”, “தூங்காதே தம்பி தூங்காதே”, “உயர்ந்த உள்ளம்”, “பேர் சொல்லும் பிள்ளை” போன்ற கமல்ஹாசன் திரைப்படங்களும் ஏவிஎம் சரவணன் தனது சகோதரர்களோடு இணைந்து தயாரித்து, தொடர் வெற்றித் திரைப்படங்களைத் தமிழ் திரையுலகிற்கு தந்த வண்ணம் இருந்தார்.
2007ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏவிஎம் அதிக பொருட் செலவில் தயாரித்து வெளியிட்ட திரைப்படமாக வெளிவந்தது தான் “சிவாஜி”. தங்களது தந்தையும், ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனருமான ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களின் 100வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையிலும், தங்களது 168வது தயாரிப்பாகவும், மேலும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கருடன் ஏவிஎம் இணைந்து பயணித்த ஒரே திரைப்படமாகவும் அமைந்திருந்தது “சிவாஜி” என்ற மாபெரும் வெற்றித் திரைப்படம்.
இடையிடையே கே பாக்கியராஜ் உடன் முந்தானை முடிச்சு, இயக்குநர் விசுவுடன் சம்சாரம் அது மின்சாரம், ஆர்.சுந்தர்ராஜன், மோகன் கூட்டணியில் மெல்லத் திறந்தது கதவு, விஜயகாந்த்தை வைத்து மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ் போன்ற பல வெற்றி படங்களையும் தயாரித்தனர்.
தொடர்ந்து அடுத்தக்கட்ட தலைமுறை நாயகர்களான விஜய்(வேட்டைக்காரன்), அஜித்(திருப்பதி), சூர்யா(பேரழகன், அயன்), விக்ரம்(ஜெமினி), மாதவன்(பிரியமான தோழி) போன்ற இளம் நடிகர்களையும் தங்களது ஏவிஎம் பேனரின் கீழ், அவர்களுக்கேற்ற கதைக் களங்களுடனும், அன்றைய ரசிகர்களின் நாடித் துடிப்பறிந்து, அவர்களது ரசனைக்கேற்றவாறும் திரைப்படங்களைத் தந்தார்.
தங்களது ஏவிஎம் என்ற அந்த மூன்றெழுத்து கனவுலக் கலைக்கூடத்தை புதுப்பித்துக் கொண்டே சென்று, வெற்றி என்ற இலக்கை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு பயணித்ததோடு, தன்னம்பிக்கையும், தன்னடக்கத்தையும் தங்களது வாழ்நாளில் ஓர் அங்கமாகவே எண்ணி, கலைச்சேவை புரிந்த ஏவிஎம் சகோதரர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படும் ஏவிஎம் சரவணன் இன்று நம்மோடு இல்லை என்றாலும், அவர் உருவாக்கித் தந்த திரைக்காவியங்கள் மூலமாக என்றென்றும் நிலைத்திருப்பார்.