'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல்
தமிழ் சினிமாவில் இப்போது ஒரு புது டிரென்ட் உள்ளது. பழைய பாடல்களை அப்படியே பயன்படுத்துவது அல்லது கொஞ்சம் மாற்றி பயன்படுத்துவது என சில பொருத்தமான காட்சிகளில் அமைத்து வருகிறார்கள். அவை படத்திற்கு பெரிய பிளஸ் பாயின்ட்டாக அமைகின்றன.
இசையமைப்பாளர் இளையராவின் சில சூப்பர் ஹிட் பாடல்களை அப்படித்தான் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் அவரிடம் முறையான அனுமதி பெற்று பயன்படுத்துகிறார்கள். சிலர் அவரிடம் எந்த அனுமதியும் பெறாமல் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்குகிறார்கள்.
தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் அவர்கள் தயாரித்த அஜித் நடித்த 'குட் பேட் அக்லி', பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' ஆகிய படங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தினார்கள். அதற்கு தன்னிடம் முறையான அனுமதியைப் பெறவில்லை என நீதிமன்றத்தில் இளையராஜா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அப்பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. அதனால், 'குட் பேட் அக்லி' மற்றும் 'டியூட்' ஆகிய படங்கள் ஓடிடியில் இடம் பெற்ற போது அவற்றை நீக்கினார்கள். தற்போது இளையராஜா தரப்பும், மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தரப்பும் சமாதான உடன்படிக்கைக்கு வந்தார்கள். இதையடுத்து 'டியூட்' படத்தில் நீக்கப்பட்டிருந்த 'கருத்த மச்சான்' பாடல் மீண்டும் இடம் பெற்றுள்ளது.
'குட் பேட் அக்லி' படத்தில் இடம் பெற்றிருந்த 'ஒத்த ரூபா தாரேன், இளமைஇதோ இதோ, எஞ்சோடி மஞ்சக் குருவி' ஆகிய பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை. விரைவில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.