‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛வா வாத்தியார்'. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படம் துவங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. பலகட்ட தாமத்திற்கு பின் படம் ரிலீஸிற்கு தயாராகி வந்தது. இடையில் ஓரிரு முறை ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தான் படம் டிச., 12ல் ரிலீஸ் என அறிவித்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை, ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தங்களிடம் ரூ.10.35 கோடி கடன் பெற்றிருந்தது. அதை வட்டி உடன் செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று(டிச., 4) வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
கோர்ட்டின் இந்த உத்தரவால் ‛வா வாத்தியார்' படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.