உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி

மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி

தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை இயக்கியவர் அஜய் பூபதி. தற்போது மகேஷ்பாபுவின் சகோதரர் ரமேஷ்பாபுவின் மகனும் நடிகர் கிருஷ்ணாவின் பேரனுமான ஜெய கிருஷ்ணாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தி, ஸ்ரீனிவாச மங்காபுரம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் அஜய் பூபதி. இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ரவீணா டான்டனின் மகள் ராஷா தடானி தெலுங்கில் அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள சந்தேரி என்கிற இடத்தில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள பெல்லாரியில் நடைபெற உள்ளது.

இயக்குனர் அஜய் பூபதி கூறும்போது, “முதலில் ஜெய கிருஷ்ணாவை தேடிச்சென்று நான் கதாநாயகன் ஆக்கவில்லை. இளம் ஹீரோவை அறிமுகப்படுத்தி படம் இயக்குவீர்களா என்று என்னிடம் தயாரிப்பாளர் கேட்டபோது அதற்கு உடனே ஓகே சொன்னேன். அப்போதுதான் அவர்களே ஜெய கிருஷ்ணாவை என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

அதேபோலத்தான் ராஷா தடானி ஹிந்தியில் அவரது முதல் படமான ஆசாத்தில் நடித்த சமயத்தில் அந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி ஹிட்டான போதே அவரை எனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவும் இந்த படத்தில் சாத்தியமாயிற்று. இரண்டு குடும்பத்தினரும் எந்த ஒரு இடத்திலும் தலையிடவோ குறுக்கிடவோ செய்யவில்லை. என்னை முழுமையாக நம்பி அவர்களது வீட்டு குழந்தைகளை ஒப்படைத்து விட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !