பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால்
பிரித்விராஜ் நடிப்பில் தற்போது படப்பிடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் படம் கலீபா. புலி முருகன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய வைசாக் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மோகன்லாலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் பிரித்விராஜின் தாத்தாவாக மாம்பரக்கல் அகமத் அலி என்கிற ஒரு தாதா வேடத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார்..
இது குறித்த தகவலை தெரிவித்துள்ள பிரித்விராஜ், “இந்த ஜாம்பவானை முதல் பாகத்தில் சந்தியுங்கள். இரண்டாவது பாகத்தில் அவரது ரத்த சரித்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். முதல் பாகம் 2026 ஓணம் பண்டிகையில் வெளியாகிறது” என்று இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் புதிய தகவலையும் தெரிவித்துள்ளார் பிரித்விராஜ்.
ஏற்கனவே ப்ரோ டாடி படத்தில் பிரித்விராஜுக்கு அப்பாவாக மோகன்லால் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் தாத்தாவாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.