பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர்
கடந்த 2017ல் கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருக்கிறது என குற்றம் சாட்டப்பட்டு அவர் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிறைவாசமும் அனுபவித்து ஜாமினில் வெளிவந்தார். இந்த நிலையில் அவருக்கும் இந்த குற்ற சம்பவத்திற்கும் சம்பந்தமில்லை என எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இதனை தொடர்ந்து இந்த தீர்ப்பை வரவேற்று பலரும், பாதிக்கப்பட்ட நடிகைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் திலீப் மீது குற்றச்சாட்டு இருந்ததால் அவர் நடிகர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் நிரபராதி என நீதிமன்றம் அறிவித்துள்ளதால் மலையாள தொழிலாளர் நல சங்கத்தின் (பெப்கா) தலைவரும் இயக்குநருமான பி.உன்னிகிருஷ்ணன் மீண்டும் திலீப்பை இந்த சங்கத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதே சமயம் பாதிக்கப்பட்ட நடிகை சார்பாக துவக்கத்திலிருந்து குரல் கொடுத்து வரும் டப்பிங் கலைஞரும் நடிகையுமான பாக்கியலட்சுமி என்பவர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து தனது பொறுப்பை ராஜினாமா செய்து விலகியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மாவட்ட நீதிமன்றத்தில் தான், சம்பந்தப்பட்ட நடிகர் குற்றம் செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. இதுவே இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல நிலைகள் இருக்கின்றன. அதற்குள்ளாகவே தங்களுக்கு வேண்டப்பட்டவரை உடனடியாக சங்கத்தில் சேர்ப்பதற்கு எதற்காக இவ்வளவு ஆர்வம் ? இனி நான் சினிமா தொடர்பான எந்த ஒரு சங்கத்திலும் அங்கம் வகிக்க போவதில்லை” என்று கூறியுள்ளார்.