பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர்
மராத்தி கவிஞரும் நாடக ஆசிரியருமான ராம் கணேஷ் கட்கரி எழுதிய நாடகங்களில் புகழ்பெற்றது, 'புண்ய பிரபாவ்'. இந்திய நாடக உலகில், கிளாசிக் எனப் போற்றப்படும் இந்நாடகத்தைத் தழுவி கண்ணதாசன் திரைக்கதை, வசனம் எழுதி உருவாக்கிய படம் 'மகாதேவி'. நாயகியின் பெயரில் படத்தின் தலைப்பை வைத்தனர். இதை சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கினார்.
இதில், எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்தார். சாவித்திரி, மகாதேவியாகவும் பி.எஸ்.வீரப்பா வில்லனாகவும் நடித்தனர். எம்.என்.ராஜம், ஓ.ஏ.கே. தேவர், கே.ஆர்.ராம்சிங், சந்திரபாபு, டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி, எஸ்.எம்.திருப்பதிசாமி, 'மாஸ்டர்' முரளி, கே.என்.வெங்கடராமன், என்.எஸ்.நாராயண பிள்ளை என பலர் நடித்தனர்.
இந்தப் படத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால், படத்தின் டைட்டில் 'மகாதேவி' என்பது நாயகியின் பெயர். அதேபோல படத்தின் நாயகன் எம்ஜிஆருக்கு இணையாக வில்லனாக நடித்த பி எஸ் வீரப்பாவின் நடிப்பும் பேசப்பட்டது. எம்ஜிஆரை விட பி.எஸ். வீரப்பாவுக்கு தான் வசனங்களில் அதிக முக்கியத்துவம் உண்டு. பி.எஸ்.வீரப்பா பேசும் 'மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி' என்ற வசனம் பிரபலமானது.
எம்ஜிஆர் இடமிருந்து வெளிப்பட்டது காதலும் வீரமான வாள் சண்டை மட்டுமே. எம்ஜிஆர் ஹீரோவாக உச்சத்தில் இருந்த போதும் நாயகியின் பெயரை வைப்பதற்கு அனுமதித்தார், அதோடு வில்லனுக்கும் சம வாய்ப்பளித்தார்.