உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம்
பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ல் காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு நடிகர் திலீப் ஜாமீனில் வெளி வந்தார். தற்போது 8 வருடங்களுக்கு பிறகு எர்ணாகுளம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நடிகர் திலீப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார். திலீப் விடுதலை ஆனது குறித்து பலரும் இரு வகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த நடிகை பாதிக்கப்பட்ட அந்த சமயத்தில் வில்லன் நடிகர் லாலின் வீட்டில் தான் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு காவல் நிலையம் வரை சென்று இந்த வழக்கு குறித்து பதிவு செய்ய உதவி செய்தார்.
இந்த வழக்கில் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு குறித்து அவர் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நடிகை அந்த சமயத்தில் என்னை தேடி வந்தபோது, அவர் பாதிக்கப்பட்டதை அறிந்து அதற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என நினைத்தேன். அதன்பிறகு வந்த நாட்களில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் மிக உயரிய தண்டனை கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்தேன். இப்போது மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த வழக்கு உயர்நீதிமன்றம் அப்பீலுக்கு போனாலும் உண்மையில் நடந்தது என்ன என்பதை அங்கேயும் சொல்வதற்கு தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.