உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சாண்டோ சின்னப்ப தேவர், எம் ஜி ஆர் இருவரின் நட்பிற்கு ஆணிவேராய் அமைந்த “ராஜகுமாரி”

பிளாஷ்பேக்: சாண்டோ சின்னப்ப தேவர், எம் ஜி ஆர் இருவரின் நட்பிற்கு ஆணிவேராய் அமைந்த “ராஜகுமாரி”


தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தியான மக்கள் திலகம் எம் ஜி ஆரும், தனித்துவமிக்க தனது தயாரிப்பு உத்திகளால் பல தரமான திரைப்படங்களைத் தமிழ் சினிமாவிற்கு தந்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவரும் உடன் பிறவா சகோதரர்கள் போலவே கலையுலகில் பயணித்து, காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பல கண்ணியமான திரைக்காவியங்களைத் தந்திருக்கின்றனர். தொழில்முறை நட்பு என்பதையும் தாண்டி, இவ்விருவரின் நட்பு கலையுலகில் ஓர் வரலாற்று சிறப்புமிக்க நட்பாகவே இருந்தும் வந்தது. அந்தவகையில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த பரஸ்பர மரியாதைதான் அதற்கு காரணம் என்றாலும் அது மிகையன்று. இப்படி இவ்விருவரின் நட்பு துளிர்விட காரணமாக அமைந்த திரைப்படம்தான் “ராஜகுமாரி”.

இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமான இத்திரைப்படத்தில், பெரிய நடிகர்களான பி யூ சின்னப்பா, டி ஆர் ராஜகுமாரி ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து பெரும் பொருட் செலவில் படத்தை எடுக்க நினைத்திருந்த தயாரிப்பு தரப்பிடம், “ஸ்ரீமுருகன்” திரைப்படத்தில் சிவன், பார்வதியாக வந்து சிவதாண்டவம் ஆடிய எம் ஜி ஆரையும், உடன் நடனமாடிய கே மாலதி என்ற நடிகையையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கலாம் என படத்தின் இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி கூற, அதன்படியே எம் ஜி ஆர் படத்தின் நாயகன் ஆனார்.

“ராஜகுமாரி” படக் கதையில் ஒரு மகாராணி. அவளுடைய மெய்காப்பாளன் ஒருவனோடு சண்டையிட்டு நாயகன் வெல்வது போல் ஒரு காட்சி. பிரபல பயில்வான் ஒருவரை அந்த மெய்காப்பாளன் வேடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான சோமு. அப்போது உங்க யூனிட்டிலேயே அந்த வேடத்துக்கு பொருத்தமான ஒருவர் இருக்கிறாரே, வெளியிலிருந்து ஏன் வேறு ஒருவரை வரவழைக்க வேண்டும்? என எம் ஜி ஆர் தயாரிப்பாளர் சோமுவைப் பார்த்து கேட்க, யாரைச் சொல்கிறீர்கள்? என தயாரிப்பாளர் சோமு எம் ஜி ஆரிடம் கேட்க, சாண்டோ சின்னப்பா இருக்கிறாரே என எம் ஜி ஆர் பதில் தந்தார். நம்ம கம்பெனியில் மாதச் சம்பளம் வாங்கும் எக்ஸ்ட்ரா நடிகர் அவர். வேறு பிரபலமானவரைப் போடலாம் என்றார் சோமு.

சின்னப்பாவின் திறமை எனக்குத் தெரியும். அவர் மிகவும் நன்றாக சண்டை போடுவார். ஒரு வளர்ந்து வரும் நடிகருக்கு உதவியதாக இருக்கும் அவரையே இந்தக் காட்சியில் நடிக்க வைக்கலாமே என எம் ஜி ஆர் மீண்டும் கேட்டுக் கொள்ள, நீங்களே கதாநாயகனாக நடிப்பது இதுதான் முதல் முறை, உங்களோடு சண்டை போடுபவர் பிரபலமானவராக இருந்தால்தானே நன்றாக இருக்கும். கமால்தீன் பயில்வான் என்று ஒருவர் இருக்கிறார், அவரையே நடிக்க வைக்கலாம் என்றார் தயாரிப்பாளர் சோமு.

என்னை மன்னித்துவிடுங்கள்! இந்த சண்டைக் காட்சியில் சின்னப்பாவையே நடிக்க ஏற்பாடு செய்யுங்கள். இல்லையென்றால் இந்த சண்டைக் காட்சியே வேண்டாம் என்றார் எம் ஜி ஆர். இறுதியில் சாண்டோ சின்னப்ப தேவரையே அந்த சண்டைக் காட்சியில் நடிக்க வைக்கலாம் என தயாரிப்புத் தரப்பு முடிவு செய்து, படமாக்கப்பட்டது. அன்று துளிர்விட ஆரம்பித்த எம் ஜி ஆர், சாண்டோ சின்னப்ப தேவரின் நட்பு, பெரிய விருட்சமாகி, பின்னாளில் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த 16 திரைப்படங்களில் நாயகனாக எம் ஜி ஆர் நடிப்பதற்கு அஸ்திவாரமிட்ட ஒரு திரைப்படமாகவும் அமைந்தது இந்த “ராஜகுமாரி” என்றால் அது மிகையன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !