ராஜமவுலியின் பிலிம் செட்டை பார்வையிட விரும்பும் ஜேம்ஸ் கேமரூன்
அவதார் : பயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தை 20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் டிசம்பர் 19 அன்று இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது. இந்த படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், பாகுபலி இயக்குனர் ராஜமவுலியிடம் வீடியோ மூலம் பேசியுள்ளார். அப்போது இருவரும் 'அவதார் : பயர் அண்ட் ஆஷ்' பற்றி கலந்துரையாடி உள்ளனர்.
கதை சொல்லலின் நுணுக்கங்கள், தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் மற்றும் பட வெளியீட்டின்போது ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து இரண்டு இயக்குநர்களும் வெளிப்படையாக உரையாடி இருக்கின்றனர். காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் 'அவதார் : பயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தை பார்த்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டபோது திரையரங்கில் தான் ஒரு குழந்தையைப் போல குதூகலித்ததாக எஸ்.எஸ். ராஜமெளலி கூறியுள்ளார்.
அப்போது ஐதராபாத்தில் உள்ள ஐமாக்ஸில் ‛அவதார்' திரைப்படம் ஒரு வருடம் ஓடியது என்ற நினைவுகளை பகிர்ந்த எஸ்.எஸ்.ராஜமவுலி, பெரிய திரை அனுபவங்களுக்கு 'அவதார்' திரைப்படம் ஒரு மைல்கல் என்றும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை பாராட்டினார்.
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் சினிமா பார்வையைப் பாராட்டியதோடு இந்திய படங்களின் பிலிம் செட்டை பார்வையிடும் தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.