மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு ; ரஜினிகாந்த் இரங்கல் செய்தி
மலையாள திரை உலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் நடிகர் சீனிவாசன். இவர் கதை எழுதிய பல படங்கள் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை பெற்றுள்ளன. கடந்த சில வருடங்களாகவே வயோதிகம் மற்றும் உடல்நல குறைவு காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார் சீனிவாசன். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். மலையாள திரையுலகைச் சேர்ந்த மோகன்லால், மம்முட்டி, திலீப் உள்ளிட்ட பிரபலங்கள் அனைவரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்று காலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சீனிவாசனின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “எனது அருமை நண்பர் சீனிவாசனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவர் என்னுடைய கிளாஸ்மேட் ஆக இருந்தார். மிகச்சிறந்த நடிகர். அதைவிட நல்ல மனிதநேயம் கொண்ட மனிதர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.
திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்று வெளியேறிய பின்னர் ரஜினிகாந்த் தமிழிலும் சீனிவாசன் மலையாளத்திலும் முன்னேற துவங்கினர்.. ஒரு கட்டத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் சீனிவாசன் கதையில் உருவான ‛கத பறயும்போல்' படத்தை ரஜினி பார்க்க நேர்ந்தபோது அது சீனிவாசன் எழுதிய கதை என்று தெரியவந்தது. உடனடியாக சீனிவாசனை நேரில் சந்தித்து, “இவ்வளவு அற்புதமான கதாசிரியராக மாறியிருக்கிறாய்.. பொதுவாக நான் ஒரு படத்தில் நடிக்கும்போது இன்னொரு படத்தில் நடிப்பது இல்லை. உனக்காக அந்த கொள்கையை தளர்த்திக் கொண்டு தற்போது எந்திரன் படத்தில் நடித்து வந்தாலும் இந்த கத பறயும்போல் படத்தின் ரீமேக்கிலும் நான் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறி அவரை ரஜினிகாந்த் நெகிழ வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா
கொச்சியில் தனது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வரும் சூர்யா, இன்று காலை நேரில் சென்று சீனிவாசனுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் சீனிவாசன் குறித்து சூர்யா பேசும்போது, “சீனிவாசன் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். சிறுவயதிலிருந்தே அவருடைய படங்களை நான் பார்த்து ரசிப்பேன். கொச்சியில் படப்பிடிப்பில் இருக்கும் போது அவர் இறந்துவிட்டார் என்கிற தகவல் எனக்கு கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அதனால் நேரில் வந்து அவருக்கு எனது அஞ்சலியை செலுத்த விரும்பினேன். அவர் மறைந்தாலும் அவருடைய கதைகள், படங்கள் அனைத்தும் எல்லோருடைய மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.