ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன்
மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவு பெற்றது. அதேசமயம் இந்த படம் தெலுங்கு, கன்னட மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அப்படி ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் இந்த இரண்டு பாகங்களிலும் ரீமேக் செய்து நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
மலையாளத்தில் மூன்றாம் பாகம் எப்போது துவங்கும் என காத்திருந்த அவர் தற்போது ஹிந்தியில் திரிஷ்யம் 3 திரைப்படத்திற்காக வேலைகளில் இறங்கி உள்ளார். இந்த நிலையில் 2026, அக்டோபர் 2ம் தேதி திரிஷ்யம் 3 ரிலீஸ் ஆகும் என்று தற்போது அதன் ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அஜய் தேவ்கன்.
துவக்கத்தில் மலையாளம் மற்றும் ஹிந்தியில் திரிஷ்யம் 3 ஒரே நாளில் ரிலீஸ் ஆவது போலத்தான் பேசப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறும்போது, மலையாளத்தில் வெளியான இரண்டு மாதங்கள் கழித்து தான் ஹிந்தியில் அதன் ரீமேக் வெளியாகும் என்றும் இன்னும் நான்கு மாதங்களில் மலையாளத்தில் படம் வெளியாகி விடும் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் வரும் சம்மர் விடுமுறையில் திரிஷ்யம் 3 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.