30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1995ல் வெளியான படம் பம்பாய். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, மனிஷா கொய்ராலா இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்து முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த காதலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை பற்றி பேசிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் வெளியாகி 30 வருடங்கள் ஆனதை தொடர்ந்து இதைக் கொண்டாடும் விதமாக கேரளாவை சேர்ந்த பேக்கல் ரிசார்ட் வளர்ச்சிக் கழகம் அந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. இதில் கலந்துகொள்ள பம்பாய் பட குழுவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதற்கு காரணம் ஏற்கனவே கேரளாவில் காசர்கோடு பகுதியில் உள்ள பேக்கல் துறைமுகம் ஓரளவு பிரசித்தி பெற்றிருந்தாலும் பம்பாய் படத்தில் இடம் பெற்ற உயிரே உயிரே பாடல் முழுவதும் இந்த துறைமுகத்தில் தான் படமாக்கப்பட்டது. அதன் பிறகு இது மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாறியது. அதேபோல இந்த பேக்கல் ரிசார்ட் வளர்ச்சிக் கழகமும் அந்த வருடத்தில் தான் துவங்கப்பட்டு 30 வருடங்களை தற்போது நிறைவு செய்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றாக கொண்டாடும் விதமாக இந்த விழாவிற்கு நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்போது பம்பாய் படத்தின் இயக்குனர் மணிரத்னம், நாயகி மனிஷா கொய்ராலா, ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் ஆகியோர் கேரளாவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பேக்கல் துறைமுகத்தில் தாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதிகளை மீண்டும் பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களுடனும் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி சில காரணங்களால் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.