ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார்
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலேயே திரைக்கதை மன்னன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரராக பாராட்டப்படுபவர் இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ். பாரதிராஜாவின் சீடரான இவர் 16 வயதினிலே படத்திலிருந்து அவரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் அவராலேயே கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டு அதன்பிறகு தன்னுடைய தனித்துவமான கதை உருவாக்கம் டைரக்சனில் மிகப்பெரிய திரை ஆளுமையாக உருவெடுத்தார்.
வரும் ஜனவரி 7ம் தேதி அவர் 72 வயதை தொடுகிறார். அது மட்டுமல்ல திரையுலகில் அவர் நுழைந்து கிட்டதட்ட 50 வருடங்களையும் நிறைவு செய்கிறார். இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றாக கொண்டாடும் விதமாக வரும் ஜனவரி 7ம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது சம்மதத்தை தெரிவித்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இது குறித்து இன்னும் பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்றாலும் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, ஜனவரி 7ஆம் தேதி இப்படி ஒரு விழா இருக்கிறது உங்களது தேதியை இப்போதே ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்பது போன்று ஒரு செய்தியை பல பிரபலங்களுக்கு அனுப்பி வருகிறாராம். இந்த நிகழ்வில் தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்தை சேர்ந்த அனில் கபூர் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.