பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர்
மதுரையைச் சேர்ந்த நாடக நடிகர் என்.என்.கண்ணப்பா. நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சிவாஜி கணேசன், நம்பியாரோடு ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது சின்ன திரையில் இருந்து சினிமாவுக்கு நடிகர்கள் வருவது போல அந்த காலத்தில் நாடகத்தில் இருந்து நடிகர்கள் சினிமாவுக்கு வந்தார்கள். அவர்கள் வரிசையில் வந்தவர் கண்ணப்பா.
தமிழ்ப் படவுலகில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் சிறந்து விளங்கியவர். 1951ம் ஆண்டு 'தேவகி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் கண்ணப்பாவுக்கு ஜோடியாக நடித்தவர் எம்ஜிஆரின் மனைவி ஆன ஜானகி. தொடர்ந்து டவுன் பஸ், நால்வர், மாலா ஒரு மங்கல விளக்கு, நன்னம்பிக்கை, படித்த பெண், மேதாவிகள், சிங்கப்பூர் சீமான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
'டவுன் பஸ்' படம் வெற்றிகரமாக ஓடியதால் இவருக்கு 'டவுன் பஸ் கண்ணப்பா' என்றொரு பெயரும் உண்டு. ரத்தத்திலகம் படம் இவரை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக வெளிப்படுத்தியது. மாணிக்க வாசகர், கப்பலோட்டிய தமிழன் படங்களும் இவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. இருப்பினும் போதிய வாய்ப்புகள் இல்லாததால் நாடகத்துறையிலிருந்து வந்தவர் மீண்டும் நாடகத்துறைக்கே சென்றுவிட்டார்.
நவசக்தி என்ற நாடக குழுவை தொடங்கி அதன் மூலம் ஏராளமான நாடகங்களை நடத்தினார். அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், அவர்கள் மூலம் நிறைய வாரிசுகள் என்றும் இதனால் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தனது கடைசி காலத்தில் வறுமையில் வாடியதாக சொல்வார்கள்.