நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகிய இருவரும் நிலத்தில் உழவு செய்த புகைப்படம் ஒன்றை சல்மானின் மைத்துனர் அதுல் நேற்று இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டார். அப்புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர். அந்த புகைப்படங்களில் பாடகர் எபி தில்லான் இடம் பெற்றுள்ளார். சல்மானின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டவர் தயாரிப்பாளரும் இயக்குனருமான அதுல் அக்னிஹோத்ரி.
அவர் பகிர்ந்த புகைப்படம் பழைய புகைப்படம் என்றாலும் சினிமா, கிரிக்கெட் ஆகியவற்றில் ரசிகர்களைக் கவர்ந்த பிரபலங்களான சல்மான், தோனி ஒன்றாக நிலத்தில் வேலை செய்வது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
டிராக்டர் ஓட்டிய பின்பு அவர்கள் சேறும் சகதியுடனும் இருப்பது விவசாயத்தின் மீது அவர்களுக்குள் இருக்கும் ஆர்வத்தைக் காட்டுவதாக உள்ளது. சல்மான் கானுக்கு மும்பையின் புறநகரில் 50 கிமீ தொலைவில் பான்வெல் என்ற இடத்தில் அவருக்குச் சொந்தமான பண்ணை இருக்கிறது. அங்கு அடிக்கடிச் சென்று விவசாயம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் சல்மான்.