விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய்
மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு தனி விமானத்தில் நேற்றிரவு சென்னை திரும்பினார் விஜய். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
சாதாரண பயணிகள் வரும் கேட் எண் ஐந்து வழியாக வெளியில் வந்து கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்காக விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கூட்டமாக வெளியில் வந்தனர். விஜய் ஐந்தாம் எண் கேட்டிலிருந்து வெளியில் வந்ததும், வெளியில் கூடியிருந்தவர்கள் ஒட்டுமொத்தமாக தடுப்புகளை தள்ளி விட்டு விஜய்யை சூழ்ந்து கொண்டனர். இதனால் பாதுகாப்புக்கு வந்த மத்திய தொழில்பதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய், கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக போலீசாரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் விஜய்யை தாங்கிப் பிடித்துக் கொண்டு வந்து, அவசரமாக காரில் ஏற்றினர். ஆனாலும் கூட்டத்தினர் காரை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் கார் அங்கிருந்து புறப்பட முடியாமல் சில நிமிடங்கள் நின்றது. அதன் பின்பு போலீசார் கூட்டத்தை கலைத்து, விஜய் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் பெரும் பரபரப்பானது.