ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்
கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்க, சுந்தர் சி இயக்கப் போவதாக ரஜினியின் 173வது பட அறிவிப்பை சில மகிழ்ச்சியான புகைப்படங்களுடன் கடந்த வருடம் நவம்பர் 5ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, அடுத்த ஒரு வாரத்தில் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர் சி.
அதன்பின் அப்படத்திற்காக சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. கடந்த சில வருடங்களில் குறிப்பிடும்படியான படங்களைக் கொடுத்த இயக்குனர்கள் அவர்கள். 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், 'டிராகன்' பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, 'மகாராஜா' பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் ஆகியோர் ரஜினிக்காக கதை எழுதினார்கள். அவர்கள் சொல்லிய கதைகளில் அஷ்வத் மாரிமுத்துவின் கதையை ரஜினி தேர்வு செய்துள்ளார் என்று சொல்கிறார்கள்.
தை மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகி சித்திரை மாதத்தில் படப்பிடிப்பு துவங்கலாம் என்று தெரிகிறது. ஏற்கெனவே ரஜினி 173 குறித்து அறிவிப்பு வெளியிட்டு இயக்குனர் விலகியதால், இந்த முறை அனைத்தையும் உறுதி செய்த பிறகே அறிவிப்பை வெளியிட உள்ளார்களாம்.
அறிவிப்பு வெளியிட்டாலும், படப்பிடிப்பு ஆரம்பமானாலும், படப்பிடிப்பு முடியும் வரை சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரஜினி, கமல்ஹாசன் கூட்டணியில் அறிவிப்பு வெளியிட்டு, அது குழப்பத்தில் முடிந்ததை தவிர்த்திருக்கலாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.