உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு

பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு

காமெடி நடிகர்களுக்கு எப்போதாவது முன்னணி ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவது உண்டு. அப்படி தங்கவேலுவுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. 'ரம்பையின் காதல்' என்ற படத்தில் பானுமதிக்கு ஜோடியாக நடித்தார்.

எம்ஜிஆர், சிவாஜிக்கு ஜோடியாக பானுமதி நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பு தங்கவேலுக்கு கிடைத்தது. 1956ம் ஆண்டு வெளிவந்த தமிழ் புராண படம் இது. ஆர்.ஆர்.சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்தில் பி.பானுமதி, கே. ஏ.தங்கவேலு, எம்.என்.நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பூமியின் அழகைக் காண தோழிகளுடன் ரம்பை பூமிக்கு வருகிறாள் (பானுமதி). வந்த இடத்தில் அழகான காட்சிகளைக் கண்டு கூடுதலான நேரம் அங்கேயே தங்கி விடுகிறாள். இந்திரனின் அவைக்கு நடனமாட குறித்த நேரத்தில் வராத ரம்பை மீது இந்திரன் கோபம் கொள்கிறான். அவள் தாமதமாக வந்ததற்கான காரணத்தை அறிகிறான் இந்திரன். 'எந்த இடத்தில் அழகை ரசித்து கொண்டு நின்றாயோ அதே இடத்தில் சிலையாக நிற்கக்கடவாய், என சபிக்கிறான்.

பின்னர் நாரதரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ரம்பையின் சாபத்தைக் குறைக்கிறான். அதாவது பகலில் சிலையாக இருக்கும் ரம்பை இரவில் தன் சுய உருவத்தைப் பெறலாம் என்பதே அது. அதன்படியே பூமியில் சிலையாகி விடுகிறாள் ரம்பை. அவள் சிலையாக நிற்கும் ஊரில் '16 வயதினிலே' சப்பானி போன்று திரிகிறவர் முத்தழகு. எல்லோராலும் கேளிக்கு உள்ளாக்கப்படும் முத்தழகுவின் (தங்கவேலு) கண்களைக் கட்டி, அந்தச் சிலையை மணமகள் என்று கூறி போலி சடங்கு நடத்தி அவனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்த விளையாட்டு திருமணத்தை நிஜ திருமணமாக ஏற்றுக் கொள்ளும் ரம்பை, முத்தழகுவை கணவனாக ஏற்றுக் காதலிக்கத் தொடங்குகிறாள். கணவனை பூமியில் இருந்து தேவலோகத்துக்கு அழைத்துச் செல்கிறாள். பிறகு என்ன நேர்கிறது என்பதே கதை. இந்தப் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தங்கவேலு அதன் பிறகு எந்த பெரிய நடிகையோடும் ஜோடியாக நடிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சதிஷ்
2026-01-04 09:32:45

வடிவேல் நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற படத்தின் கதையும் இதுதான்.