லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி
மலையாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் வுமன் கதை அம்சத்துடன் 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' என்கிற படம் வெளியானது. மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத அளவு கிட்டத்தட்ட 300 கோடி வசூல் செய்து சாதனையும் படைத்தது. இந்த படத்தை டொமினிக் அருண் என்பவர் இயக்கியிருந்தார். கல்யாணி பிரியதர்ஷன் ஒரு டிராகுலா கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில் கல்யாணிக்கு முன்னதாக இந்த வாய்ப்பு நடிகை பார்வதிக்கு தான் சென்றது என்றும் அவர் அதில் நடிக்க மறுத்து விட்டார் என்றும் ஒரு தகவல் வெளியானது.
நடிகை பார்வதி தற்போது 'பிரதம திருஷ்த்ய குற்றக்கார்' என்கிற படத்தில் நடிக்கிறார். அந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் பார்வதி கலந்து கொண்டபோது அவரிடம் செய்தியாளர்கள் லோகா பட வாய்ப்பை நீங்கள் தவிர்த்தீர்களா என்று கேட்டதும் இப்போது இந்த கேள்வி இங்கு தேவையில்லாதது என்று கூறினார் பார்வதி.
ஆனாலும் செய்தியாளர்கள், “இல்லை இதுபோல ஒரு செய்தி நாங்கள் கேள்விப்பட்டோம்” என்று மீண்டும் கேட்கவே டென்சனான பார்வதி, “மக்கள் அவர்களுக்கு என்னென்ன விருப்பமோ அதையெல்லாம் கேள்விப்படுவார்கள். நீங்களும் அதுபோல விஷயங்களை கேள்விப்பட்டிருப்பீர்கள்” என்று அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த பதிலிலிருந்து அவர் லோகா வாய்ப்பை மறுத்துள்ளார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அதேசமயம் லோகா படம் வெளியானதும் அந்த படத்தை பார்வதி மனதாரப் பாராட்டி இருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.