பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்”
பேச்சு, எழுத்து, சிந்தனை, செயல் என அனைத்திலும் சினிமாவைத் தவிர, வேறொன்றும் நினைத்திராதவரும், பிற கலைஞர்கள் செய்யத் துணியாத, கனவிலும் யோசிக்க முடியாத பல அற்புதமான கதாபாத்திரங்களையும், கதைக் களங்களையும் தெரிவு செய்து நடித்து, தென்னிந்திய சினிமாவின் தரத்தை உலக சினிமாவோடு ஒப்பீடு செய்யும் அளவிற்கு கொண்டு சென்றவரும், இந்திய சினிமாவின் அடையாளமும் ஆகிப்போன 'உலகநாயகன்' கமல்ஹாசன் திரையில் நிகழ்த்திய எண்ணற்ற புதுமைகளில் ஒரு புதுமைதான் இந்த “பேசும் படம்” என்ற திரைப்படம்.
சினிமா என்ற ஊடகத்தை ஒரு கலைக்கூடமாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு சோதனைக் கூடமாக்கி, திரைக்கு முன்னும், திரைக்குப் பின்னும் பிறர் யோசிக்கத் தவறிய, சிந்திக்கத் தவறிய பல சினிமா உத்திகளை அறிமுகம் செய்து, பரீட்சார்த்த முயற்சியில் அவர் தந்த எண்ணற்ற கலைப்படைப்புகளில் ஒன்றாக வந்த இந்தப் “பேசும் படம்” திரைப்படத்திற்கு என ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒரு திரைப்படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு அந்தக் கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல உதவும் அப்படத்தின் வசனம். வசனம் வலுவுள்ளதாக இருந்தால் மட்டுமே, அந்தக் கதையை நேர்த்தியாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க இயலும்.
சினிமா என்ற ஊடகம் மவுனப்பட யுகத்திலிருந்து, பேசும்பட யுகத்திற்கு மாற்றமானபோது அதன் வீச்சை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மக்கள் அதுவரை காணக்கிடைக்காத ஓர் அதிசயத்தைக் கண்டதாக ஆனந்தத்தில் உறைந்தே போயிருந்தனர். அதன் பின்பு அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் வளர, வளர சினிமாவின் தரமும், பார்வையாளர்களின ரசனைத் தன்மையும் மேம்பட்டது. இப்படி வளர்ந்து வந்த இந்த சினிமா உலகையும், பார்வையாளர்களையும் மீண்டும் ஒரு ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் விதமாக, படத்தில் வசனமே இல்லாமல் ஒரு மவுனப் படமாக எடுத்து, பார்வையாளர்களை அவர்களது இருக்கைகளிலிருந்து எழாத வண்ணம், திரைக்கதை அமைத்து, அதற்கேற்ற இசை வடிவம் தந்து, ஒரு சுவாரஸ்யமான மவுனத் திரைப்படத்தைத் தர இயலும் என கமல்ஹாசனும், படக்குழுவினரும் இணைந்து முயற்சித்துத் தந்த ஒரு மாபெரும் மவுனத் திரைக்காவியம்தான் இந்த “பேசும் படம்”.
இது ஒரு ஆள் மாறாட்டக் கதை. வசனமே இல்லாத இந்தக் கதைக்குள் காதல், நகைச்சுவை, சஸ்பென்ஸ் என அனைத்து சுவாரஸ்யங்களையும் சரியான விகிதத்தில் தந்து, சலிப்பே தட்டாமல் பார்வையாளர்களை அவர்களது இருக்கைகளில் அமரச் செய்திருந்ததுதான் இத்திரைப்படக் குழுவிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. கமல்ஹாசன், அமலா, சமீர் கக்கார், பரீதா ஜலால், பிராப் போத்தன், கே எஸ் ரமேஷ், டினு ஆனந்த் ஆகியோரின் நடிப்பில் “புஷ்பக விமானா” என கன்னடத்திலும், “பேசும் படம்” என்று தமிழிலும் வெளிவந்து வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. பெங்களூருவில் 25 வாரங்கள் வரை ஓடி வெள்ளி விழா கண்டது இத்திரைப்படம். முழுமையான ஊமைப் படம் என்று சொல்ல முடியாமல் போனாலும் பின்னணி இசையின் துணையோடு, படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் ஏதும் பேசாமல், பார்வையாளர்கள் பேசி கொண்டாடி மகிழ்ந்த ஓர் அற்புத திரைக்காவியம்தான் இந்த “பேசும் படம்” என்பதில் எந்த ஐயமும் இல்லை.