15 ஆண்டுகளுக்குபின் மங்கத்தா ரீ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் போடும் திட்டம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜூன் நடித்த மங்கத்தா படம் ஜனவரி 23ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. 15 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் இந்த படத்தை வெற்றி படமாக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு பதில் கொடுக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதற்காக தனி ஏற்பாடுகள் நடக்கின்றன.
கடந்த ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி, குட்பேட் அக்லி வந்தது. பின்னர் பல மாதங்களாக புதுப்படம் குறித்து அறிவிக்காமல் அஜித் கார் ரேசில் கவனம் செலுத்துகிறார். விஜய் நடித்த கில்லி, சச்சின் படங்கள் ரீ ரிலீசில் பெரியளவில் வெற்றி பெற்றன. அஜித்தின் அட்டகாசம் உள்ளிட்ட சில படங்கள் ரீ ரீலீஸ் ஆனாலும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால், மங்கத்தாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என அஜித் ரசிகர்கள் நினைக்கிறார்களாம்.
படம் குறித்து வெங்கட்பிரபு, திரிஷா, படத்தில் நடித்தவர்கள் பேச உள்ளனர். கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் படையப்பா நல்ல லாபம் சம்பாதித்து கொடுத்தது. மங்கத்தாவிலும் கமர்ஷியல் விஷயங்கள் இருப்பதால் ஹிட் ஆகும் என அஜித் தரப்பும் நம்புகிறதாம். இதற்காக சோஷியல் மீடியாவில் ஆதரவை பெறவும், பல ஊர்களில் படத்தை விளம்பரப்படுத்தவும் அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். அஜித்தின் 50து படமான மங்கத்தா, அப்போது வெளியான சமயத்தில் 80 கோடி அளவுக்கு வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.