பொங்கல் போட்டி : தியேட்டர்கள் கிடைக்கத் தடுமாறும் தெலுங்குப் படங்கள்
2026 பொங்கலுக்கு தமிழில் இரண்டே இரண்டு படங்கள்தான் வருகிறது. ஆனால், தெலுங்கில் ஐந்து படங்கள் வருகிறது. விஜய்யின் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களில் எதைத் திரையிடுவது என்பதை வியாபார சதவீதத்தை வைத்து தமிழகத் தியேட்டர்களில் முடிவு செய்து வருகிறார்கள்.
இந்த வாரம் ஜனவரி 9ம் தேதி படம் வெளியானால், அடுத்த வாரம் ஜனவரி 18ம் தேதி வரை மொத்தமாக 10 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இரண்டு படங்களையும் ஓட்ட முடியும் என நினைக்கிறார்கள். விஜய், சிவகார்த்திகேயன் இருவருக்குமே குடும்பத்துடன் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் வருவார்கள். அவற்றின் சென்சார் சான்றிதழ் எத்தனை வயதுக்குட்பட்டவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதைப் பொறுத்து குடும்ப ரசிகர்களின் எண்ணிக்கை இருக்கும்.
இந்த இரண்டு படங்களையே தமிழக தியேட்டர்கள் திரையிட அதிகம் விரும்புவதால், தெலுங்கிலிருந்து வரும் படங்களுக்கு இங்கு தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் சிரமம் இருக்கிறதாம். பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படம் பான் இந்தியா படமாக தமிழிலும் டப்பிங் ஆகி ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. அந்தப் படத்திற்கும் கூட மிகக் குறைவான தியேட்டர்களே கிடைக்கும் என்கிறார்கள். மற்ற தெலுங்குப் படங்கள் தமிழில் டப்பிங் ஆகவில்லை. நேரடியாக வெளியாக உள்ளன. இருந்தாலும் அவற்றிற்கும் ஒரு சில தியேட்டர்கள் கிடைக்கும் நிலைதான் இருக்கிறது.
இதே போல தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாக உள்ள 'ஜனநாயகன், பராசக்தி' படங்களுக்கும் ஆந்திரா, தெலங்கானாவில் குறைந்த அளவில்தான் தியேட்டர்கள் கிடைத்துள்ளனவாம்.