உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம்

பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம்


திரைப்படத் தொழிலின் முக்கிய பிரச்னையாக 'பைரசி' இணையதளங்கள் உள்ளன. ஒரு காலத்தில் திருட்டு விசிடிக்களாக இருந்த பிரச்னை, ஆன்லைன் வளர்ச்சிக்குப் பிறகு படங்களை திருட்டுத்தனமாகப் பதிவு செய்து அதை இணையதளங்களில் பதிவு செய்வதாக மாறியது. மொபைல் ஆப்கள் வளர்ச்சிக்குப் பிறகு டெலிகிராம், வாட்சப் மூலம் படங்களை அப்படியே பகிர்வதும் நடந்து வருகிறது.

சமீபத்தில் தெலுங்கானா காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையில் இப்படி பைரசியாக படங்களைத் திருட்டுத்தனமாகப் பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது தெலுங்கானா காவல்துறை மற்றும் தெலுங்கு பிலிம் சேம்பர் இணைந்து நேற்று புதிய ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளார்கள்.

அதன்படி இருவரும் இணைந்து பைரசி மூலம் புதிய படங்கள் பரவுவதை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் முடிவை எடுத்துள்ளார்கள். கண்காணிப்பு, உடனடி நீக்கம், சட்ட நடவடிக்கை ஆகியவற்றிற்கு இந்த புதிய ஒப்பந்தம் வழி செய்ய உள்ளது.

இதற்கான மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜியைப் பயன்படுத்த உள்ளார்களாம். இதன் மூலம் பைரசி பெருமளவில் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொங்கலை முன்னிட்டு படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் முதலில் பயனடைவார்கள்.

தமிழிலும் இப்படி ஒரு முயற்சியை காவல்துறையும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களும் முன்னெடுக்கலாம். ஆனால், அவர்கள் நான்கைந்து சங்கங்களாகப் பிரிந்து இருக்கிறார்கள். ஒரு சங்கத்தின் தேர்தலுக்கே தற்போது மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் திரையுலகிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என மூத்த தயாரிப்பாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !