'ஜனநாயகன்' தணிக்கை தாமதம்: வழக்கு நாளை ஒத்திவைப்பு
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில், வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' படம் இந்த வாரம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
தணிக்கை சான்றிதழைப் பெற்ற பிறகுதான் ஆன்லைன் இணையதளங்களில் படத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்க முடியும். வெளிநாடுகளுக்கு படத்தின் பிரதியை அனுப்ப முடியும்.
தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்து சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை 'மியூட்' செய்யவும் சொல்லி இருக்கிறார்கள். அந்த மாற்றங்களை செய்து கொடுத்த பின்பும் இன்னும் அவற்றைப் பார்த்து தணிக்கை வழங்க தாமதம் செய்வதாக தயாரிப்பாளர் தரப்பு வழக்கு தொடர முடிவு செய்ததாகத் தகவல்.
தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டதால் இன்று மதியம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, படத்தில் மத உணர்வை தூண்டும் வகையில் காட்சி இருக்கிறது என சென்சார் அதிகாரிகள் கூறியதாகவும், யுஏ சான்றிதழுக்கு பரிந்துரைத்த நிலையில் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பு தெரிவித்தது.
மேலும், 'ஜனநாயகன் பட ரிலீஸ் தேதியை அவர்கள் நிர்ணயித்தாலும், நாங்கள் சட்டப்படிதான் செயல்பட முடியும்', மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.பின்னர், தயாரிப்பு நிறுவனத்திடம், ''நீங்கள் ஏன் பட ரிலீஸை 10ம் தேதிக்கு தள்ளிவைக்க கூடாது?'' என கேள்வி எழுப்பிய நீதிபதி பி.டி.ஆஷா, வழக்கை நாளைக்கு (ஜன.,7) மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தார். ஜனநாயகன் திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக வந்துள்ள புகார்களை நாளைக்குதாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.