உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'?

ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'?


விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' படம் ஜன.,9ல் ரிலீஸ் என அறிவித்து, முன்பதிவும் துவங்கப்பட்டது. ஆனால், இதுவரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. ரிலீசுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சென்சார் சான்றிதழ் தாமதமாவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது பட தயாரிப்பு நிறுவனம்.

வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, ஜனநாயகனில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சி இருப்பதாக சென்சார் வாரியம் கூறியது. இது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், படத்தை மீண்டும் ஆய்வு செய்ய புதிய கமிட்டிக்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் ஏ ஆர் சுந்தரேசன் கோர்ட்டில் தெரிவித்தார்.

இதற்கு, தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், ''குறுகிய நாள் தான் உள்ளது புதிய கமிட்டிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும். மூன்று மொழியில் படத்தை திரையிட வேண்டும்'' என்று கூறினார்.

இதை கேட்ட நீதிபதி, ''ஜனநாயகன் படத்தை ஏன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்க கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே'' எனக்கூறி வழக்கை நாளைக்கு (ஜன,7) ஒத்திவைத்தார்.

வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், நாளைக்கே உத்தரவு வந்தாலும், அதன்பிறகு சென்சார் அதிகாரிகள் 2 நாளில் சான்றிதழ் வழங்கவேண்டும். இப்படியான சிக்கலில், ஜன.,9ல் திட்டமிட்டபடி படம் ரிலீசாகுமா அல்லது 10ம் தேதியோ அல்லது 14ம் தேதியோ தள்ளிப்போகுமா என்பது இனிதான் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !