'பராசக்தி, ஜனநாயகன்' டிரைலர்களை தட்டித் தூக்கிய 'டாக்சிக்' வீடியோ
தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை தெலுங்கு நடிகர்களான பிரபாஸ், அல்லு அர்ஜுன், கன்னட நடிகரான யஷ், தமிழ் நடிகர்களான விஜய், அஜித் ஆகியோரது படங்களின் வீடியோக்கள் தான் யு டியூபில் அதிக பார்வைகளைப் பெறும்.
ஆனாலும், தமிழ் நடிகர்களை விடவும், பான் இந்தியா அளவில் பிரபலமான பிரபாஸ், அல்லு அர்ஜுன், யஷ் ஆகியோரது படங்களின் வீடியோக்கள் வந்தால் ஒவ்வொரு முறை புதிதாக வரும் போதும் அவை புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும்.
தமிழ் நடிகர்கள் யாருக்கும் இன்னும் பான் இந்தியா வியாபாரம், வசூல் கிடைக்கவில்லை. சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் எப்போதோ சாதித்த அளவிற்குக் கூட மற்ற மாநிலங்களில் விஜய், அஜித் உள்ளிட்டோரது படங்கள் வரவேற்பைப் பெறவில்லை என்பதுதான் உண்மை.
கடந்த பத்து நாட்களாக விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' ஆகிய படங்களின் டிரைலர்கள் பெற்ற பார்வைகள் குறித்து இங்கு கடும் சர்ச்சை ஏற்பட்டது. இரண்டுமே போலியான விதத்தில் சேர்க்கப்பட்டவை என சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டினார்கள்.
இந்நிலையில் 'கேஜிஎப்' பட பிரபலம் கன்னட நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவருடைய அடுத்த படமான 'டாக்சிக்' படத்தின் அவருடைய கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டார்கள். இத்தனைக்கும் அது படத்தின் டிரைலர் கூட இல்லை. ஒரு கல்லறைக்கு வந்து காரிலிருந்து இறங்கி யஷ் சண்டை போடும் ஒரே ஒரு சீன் மட்டும்தான் அதில் இடம் பெற்றிருந்தது. ஆபாசமும், அதிரடி ஆக்ஷனும் நிறைந்த அந்த வீடியோ தற்போது 47 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்த 'டாக்சிக்' படத்தை இணைந்து தயாரிப்பது 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ். 'ஜனநாயகன்' படத்தின் நாயகன் விஜய்யின் ரசிகர்கள் தான் 'பராசக்தி' படத்தின் டிரைலர் பார்வைகள் போலியானவை என அதிகம் பேசியவர்கள். அவர்கள் இப்போது 'டாக்சிக்' வீடியோவின் பார்வைகளைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
இதைப் பார்த்து அமைதியாக இருப்பார்களா, அல்லது, இதுவும் 'பாட்ஸ்' தான் என கமெண்ட் செய்வார்களா ?.