பொங்கல் ரிலீஸ் : ‛ஜனநாயகன்' ‛நாட் கம்மிங்', ‛பராசக்தி' வெளியானது
இந்த பொங்கலை முன்னிட்டு விஜயின் ‛ஜனநாயகன்', சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' ஆகிய படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் சென்சார் பிரச்னையால் ஜனநாயகன் வெளியாகவில்லை, பராசக்தி படம் சென்சார் பெற்று இன்று ரிலீஸாகிவிட்டது.
பொதுவாக பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும். அந்தவகையில் இந்தாண்டு பொங்கலுக்கு வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருந்த ‛ஜனநாயகன்' படம் நேற்றுமுன்தினம் ஜன., 9ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது விஜயின் கடைசி படம் என அறிவித்துவிட்டதால் இந்த படத்தை அதிகளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். பல தியேட்டர்களில் விஜய் படங்களுக்கு கட்-அவுட் பேனர் என அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்தபடம் நேற்று முன்தினம் வெளியாகவில்லை. பொங்கலை முன்னிட்டு அடுத்தவாரமாவது வெளியாகலாம் என எதிர்பார்த்த நிலையில் கோர்ட்டில் வழக்கு 21ம் தேதி தான் வருகிறது. அதனால் படம் 23ல் வெளியாக வாய்ப்புள்ளது. விஜயின் கடைசி படத்தில் இவ்வளவு சிக்கலா என ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அதேசமயம் அவரது படம் எப்போது வந்தாலும் எங்களுக்கு பொங்கல் தான் ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் உள்ளனர்.
இதேப்போல் இந்த பொங்கலுக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி உள்ள ‛பராசக்தி' படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்ட பின்னணியில் இப்பட கதை உருவாகி உள்ளதால் இந்தபடமும் சென்சார் சான்றிதழ் பெறுவதில் பிரச்னை இருந்தது. கடைசியாக தணிக்கை சொன்ன ஆட்சபனைக்குரிய காட்சிகளை நீக்கி, மாற்றி தந்ததால் யுஏ சான்றிதழ் நேற்று கிடைத்து படம் இன்று வெளியாகி உள்ளது. இது சிவகார்த்திகேயனின் 25வது படம், ஜிவி பிரகாஷின் 100வது படம் என்பது கூடுதல் சிறப்பு.
‛துப்பாக்கி' படம் தொடர்ந்து விஜயின் பல படங்களில் ‛ஐயம் வெயிட்டிங்' என்று சொல்லும் டயலாக் இடம் பெறும், படமும் வந்துவிடும். ஆனால் ‛ஜனநாயகன்' படத்தில் அவர் ‛ஐயம் கம்மிங்' என்று வசனம் பேசியிருந்தார் ஆனால் படம் வெளியாகாமல் ‛வெயிட்டிங்'கிற்கு சென்றுவிட்டது.
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட்டமாய் வரவேற்று உள்ளனர். படம் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தால் நிச்சயம் அமரன் போன்று நல்ல வசூலை ஈட்ட வாய்ப்புள்ளது. ‛பராசக்தி' படத்தில் ‛தீ பரவுட்டும்' என்ற வசனம் வருகிறது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ‛தீ பரவலாம்' அல்லது நமத்து போகலாம்.