எல்லா முயற்சியும் செய்தோம்... : மன்னிப்பு கேட்ட ‛ஜனநாயகன' தயாரிப்பாளர்
விஜயின் ‛ஜனநாயகன்' படம் சென்சார் பிரச்னை, கோர்ட் தடை காரணமாக வெளியாகாத நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் நிறுவனத்தை சேர்ந்த வெங்கட் கே நாராயணா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, ஜனநாயகன் படத்தை பெரும் அன்போடும் எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் எங்களது நன்றி. கடந்த இரண்ட நாட்களில் எங்களுக்கு எண்ணற்ற அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் உங்களுக்கு சில தகவல்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
டிசம்பர் 18ம் தேதி ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. டிசம்பர் 22ம் தேதி சில திருத்தங்களுடன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்படும் என்று தணிக்கை குழுவிடம் இருந்து எங்களுக்கு மின்னஞ்சல் வந்தது. அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்து நாங்கள் படத்தை சமர்பித்தோம். படத்தின் ரிலீஸ் தேதிக்கு சில நாட்கள் முன்பாக ஜனவரி 5ம் தேதி படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என எங்களுக்கு தகவல் வந்தது. காலம் கருதி நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடினோம். படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லா முயற்சிகளையும் செய்தோம், இந்த இக்கட்டான சூழலில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள், விநியோகஸ்தர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் நாங்கள் செய்தோம். ஆனால் நடந்தவை எல்லாம் எங்களது கட்டுப்பாட்டையும் மீறி நடந்தது. இந்த படத்திற்காக எண்ணற்றவர்கள் ஆத்மார்த்தமாக உழைத்த அனைவருக்கு இது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் ரசிகர்களின் அன்பை சம்பாதித்த விஜய்க்கு ஒரு சிறப்பான பிரியாவிடையை நாங்கள் கொடுக்க நினைத்தோம். நீதிமன்றத்தின் மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. முடிந்த அளவு சீக்கிரம் படம் வெளியாகும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.