வெங்கடேஷ் என்னுடைய நவீன கால குரு : சிரஞ்சீவி புகழாரம்
சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் மன சங்கர வர பிரசாத் காரு திரைப்படம் வரும் சங்கராந்தி பண்டிகை ரிலீஸ் ஆக ஜனவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் வெங்கடேஷ் முதன்முறையாக சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் மெகா பிரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிரஞ்சீவி கலந்துகொண்டு வெங்கடேஷ் பற்றி பேசும்போது, “வெங்கடேஷுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு திரும்பியது போல சிரிப்பும் கலகலப்புமாக இருந்தது. வெங்கடேஷ் எப்போதுமே வேலை மற்றும் பர்சனல் வாழ்க்கை இரண்டையுமே பேலன்ஸ் செய்து வருகிற ஒருவர். அவர் என்னிடம் பகிர்ந்து கொள்ளும் சில விஷயங்களை பார்க்கும் போது அவருடைய வயதுக்கு மீறிய அனுபவ அறிவு முயற்சி எனக்கு தென்பட்டது. சொல்லப்போனால் சில நேரங்களில் கிட்டத்தட்ட அவரை என்னுடைய நவீன கால குருவாகவே நினைத்ததும் உண்டு” என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் படத்தின் இயக்குனர் அனில் ரவி புடியிடம், “மீண்டும் நாங்கள் இருவரும் முழு படத்திலும் இணைந்து நடிக்கும் விதமாக ஒரு கதையை தயார் செய்யுங்கள்” என கோரிக்கை ஒன்றையும் வைத்தார் சிரஞ்சீவி.