இயக்குனர் கீத்து மோகன்தஸுக்கு 8 வருடம் காத்திருந்து மம்முட்டி பட இயக்குனர் பதிலடி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நள தமயந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் கீத்து மோகன்தாஸ். அடுத்து சில படங்களில் நடித்தவர், பின்னர் இயக்குனராக உருமாறி லயர்ஸ் டைஸ் என்கிற படத்தை இயக்கி தேசிய விருதும் பெற்றார். அதனைத் தொடர்ந்து நிவின்பாலியை வைத்து மூத்தோன் என்கிற படத்தை இயக்கிய கீத்து மோகன்தாஸ் தற்போது ஏழு வருடங்கள் கழித்து கன்னடத்தில் முன்னணி நடிகரான யஷ்ஷை வைத்து டாக்ஸிக் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. ஜனநாயகன், பராசக்தி படங்களின் டீசர் சாதனையை முறியடிக்கும் அளவிற்கு இந்த டீசரில் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. ஒரு பெண் இயக்குனர் தான் இந்த படத்தை இயக்கினாரா என ராம் கோபால் வர்மாவே ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பும் அளவுக்கு அந்த டீசரில் முகம் சுளிக்கும்படியான சில காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு வழக்கம் போல நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் மலையாள இயக்குனரும் 2016ல் மம்முட்டி நடித்த கசாபா என்கிற படத்தை இயக்கியவருமான நிதின் ரஞ்சி பணிக்கர் என்பவர் கீத்து மோகன்தாஸுக்கு தனது நாசுக்கான விமர்சனம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். எட்டு வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்றால் கசாபா படத்தில் மம்முட்டி கொஞ்சம் மோசமான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு பெண் அதிகாரியிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அந்த படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நடிகை பார்வதி மற்றும் கீத்து மோகன்தாஸ் இருவரும் ஆணாதிக்கம் எந்த அளவிற்கு கொடிகட்டி பறக்கிறது என்று வெளிப்படையாகவே தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தான் தற்போது ஒரு பெண் இயக்குனரான கீத்து மோகன்தாஸ் தனது படத்தில் ஒரு பெண்ணை எப்படி சித்தரித்துள்ளார் என்பதை மேற்கோள் காட்டி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விமர்சனம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நிதின் ரஞ்சித் பணிக்கர்.
இந்த பதிவில் அவர் கூறும்போது, “நீங்கள் போலியாகி, உங்கள் சொந்தக் கொள்கைகளையே மறக்கும்போது, பாசாங்கு செழித்து வளர்கிறது... அதைத் தொடர்ந்து சீரழிவு ஏற்படுகிறது. இருப்பினும்... அந்தப் பின்விளைவுகளுக்கு மத்தியில் (குழப்பமானதும், தகுதியானதும் கூட) நின்று கொண்டு, அதில் சில நல்ல தருணங்களும் இருந்தன என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் இதே ஜனவரியில் இந்தப்படத்தின் டீசர் வெளியானபோதும், “சிலர் மொழி, எல்லை தாண்டிவிட்டால் தங்கள கொள்கைகளையும் தாங்கள் சொன்னதையும் வசதியாக மறந்து விடுகின்றனர்” என்று காட்டமாக விமர்சித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது...