உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணையே தேர்வு செய்கிறார்கள்: பிரானா வருத்தம்

கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணையே தேர்வு செய்கிறார்கள்: பிரானா வருத்தம்

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பிரானா. மூன்றாம் மனிதர்கள், கிளாஸ்மேட்ஸ், இளமை என்னும் பூங்காற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது குற்றச்சாட்டு, கங்கணம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ஆடிசன் வைத்து நடிகைகளை தேர்வு செய்யாமல் சமூக வலைத்தளங்களில் நடிகைகளை தேடுகிறார்கள், கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணை தேர்வு செய்கிறார்கள் என்ற பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது;

நான் சினிமாவிற்குள் வந்தது சாதிப்பதற்காகத்தான். அதற்கு நாயகியாகத்தான் நடிக்க வேண்டும் என்றோ, அழகான பெண்ணாகத்தான் திரையில் தோன்ற வேண்டும் என்றோ அவசியம் இல்லை. என் நடிப்புத் திறமையை நிரூபிக்க வாய்ப்புள்ள எந்த கதாபாத்திரமும் நான் செய்வேன்.

அதோடு கதாநாயகி என்று வரும்போது, ஒரு காலகட்டம் வரைதான் நடிக்க முடியும். ஆனால் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும்போது, அதற்கு காலவரையறை என்பது இல்லை. எல்லா கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க நினைக்கிறேன்.

நான் சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில் மிகவும் ஒல்லியாக இருப்பேன். அதை வைத்து விமர்சனம் செய்வதும், படத்தில் நடிக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இப்போது நான், என் வயதிற்கு ஏற்ற உடல் பருமனில் இருக்கிறேன்.

இப்போதெல்லாம் ஆடிசன் வைத்து நடிகைகளை தேர்வு செய்வது குறைந்து விட்டது. சமூக வலைதளத்தில் பிரபலமாக இருப்பவர்களைப் பார்த்து தேர்வு செய்கிறார்கள். சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் அனைவருக்கும் திறமை இல்லை என்று சொல்லமாட்டேன். அதேநேரம் காலம் காலமாக நடிக்க சான்ஸ் தேடுபவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

தமிழ் படத்தில் நடிக்க தமிழ் தெரியாத பிற மொழி பெண்களை தேர்வு செய்கிறார்கள். கருப்பான பெண் தேவை என்றாலும், கலரான பெண்ணை தேர்வு செய்து, அவருக்கு மேக்கப் போட்டு நடிக்க வைக்கிறார்கள். கருப்பாகவே இருக்கும் பெண்ணை தேர்வு செய்து நடிக்க வைத்தால் என்ன? இவையெல்லாம் மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !