உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'....

'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'....

'சூரரைப் போற்று' படத்திற்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா கூட்டணி இணைந்து 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்த படம் 'புறநானூறு'. படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாக அறிவித்தனர். சூர்யாவின் 43வது படமாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. 2024ம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும்படி வேலைகளும் நடந்ததாகச் சொன்னார்கள். ஆனால், மார்ச் மாதம் திடீரென சூர்யாவும், சுதாவும் இணைந்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். படத்தின் முன் தயாரிப்புப் பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் மேலும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடைசியாக படமும் நடக்கவேயில்லை.

அதன்பின் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா என நடிகர்களும் மாற 'புறநானூறு' என்ற பெயர் இல்லாமல் படத்தை கடந்த வருடம் அறிவித்து ஆரம்பித்தார்கள். பின்னர் 'பராசக்தி' என்ற பெயரை அறிவித்து இன்று படம் வெளியாகி உள்ளது.

'பராசக்தி' படத்தில் ஹிந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடும் மாணவர் குழுவின் பெயர்தான் 'புறநானூற்றுப் படை'. அதைத்தான் சூர்யாவுக்காகச் சொன்ன போது 'புறநானூறு' எனப் பெயர் வைத்திருக்கிறார் சுதா.

வசூல் ரீதியாக படம் எப்படி போகிறதோ இல்லையோ, ஆனால், இயக்குனர் சுதாவுக்கு, 100வது படமாக ஜிவி பிரகாஷ், 25வது படமாக சிவகார்த்திகேயன், மற்றும் வில்லனாக நடித்துள்ள ரவி மோகன், மற்றொரு கதாநாயகனாக அதர்வா உள்ளிட்டோரது திரையுலக வாழ்க்கையில் இந்தப் படம் முக்கியமான ஒரு படமாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !