ரஜினி வசனமும் நானும்! கண்ணா ரவியின் மகிழ்ச்சி
வெப்சீரிஸ்களில் நடிகர், கேமரா மேன், துணை இயக்குனர், உதவியாளர் என பல பணிகளை புரிந்தவர். வீரா, மண்டேலா, கைதி, கூலி உட்பட பல்வேறு படங்களில் பன்முக கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடத்தை பிடித்த 'கண்ணா ரவி' நம்முடன் பகிர்ந்தது...
பிறந்து வளர்ந்து எல்லாமே சென்னை. பெற்றோர் வைத்த கண்ணா என்ற பெயருக்கு பின்னால் தந்தை ரவி பெயரை சேர்த்து கொண்டேன். இன்ஜினியரிங் முடித்ததும் பாலு மகேந்திராவின் நடிப்பு பயிற்சி பட்டறையில் நடிப்பு கற்றுக்கொண்டேன். பின் வெப்சீரிஸ்களில் நடிக்க துவங்கினேன். 'வீரா' படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
'மண்டேலா' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தேன். இப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் நாகர்கோவிலை சேர்ந்தவர் என்பதால் திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் மக்கள் எவ்வாறு பே சுவார்கள் என்பதை தெளிவாக தெரிந்திருந்தார்.
திருநெல்வேலி மக்களின் பேச்சு படத்தில் மாறாமல் இருப்பதற்காக ஒவ்வொரு வசனத்தையும் எப்படி உச்சரிக்க வேண்டுமோ, அப்படி எழுதி கொடுத்துவிடுவார். இதனால் டப்பிங் செய்யும் போது பேச்சில் எவ்வித தடுமாற்றமும் ஏற்படவில்லை.
எனது வெப்சீரிஸ் பார்த்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரின் 'கைதி' படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். உன்னை முன்பே பார்த்து இருந்தால் 'மாநகரம்' படத்தில் நடிக்க வைத்திருப்பேன் என்றார். 'கைதி' படத்தின் இறுதியில் நான் இறந்து விடுவதாக கதை இருந்ததால் என்னால் விக்ரம் படத்தில் நடிக்க முடியவில்லை.
சிறுவயது முதல் தீவிர ரஜினி ரசிகன். சினிமாவிற்குள் நுழைந்த நாள் முதல் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசை இருந்தது. விக்ரம் படத்தில் கிடைக்காத வாய்ப்பை, லோகேஷ் கனகராஜ், 'கூலி' படத்தில் வழங்கினார்.
இப்படத்தில் எனக்கு எந்த கதாபாத்திரம் என நான், அவரிடம் கேட்கவில்லை. ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் கதை உள்ளதா என்று மட்டுமே கேட்டேன். வில்லன் நாகர்ஜூனாவின் மகனே நீ தான் என்றார். அதெல்லாம் இருக்கட்டும், ரஜினியுடன் எனக்கு காட்சி இருக்கிறதா என்று மீண்டும் கேட்டேன், காட்சி இருக்கிறது என்றார், அது போதும் என்றேன்.
'கூலி' படத்தில் ரஜினி என்னை பார்த்து 'ஏமாந்துட்டோம்னு நினைக்காத, தப்பிச்சிட்டோம்னு நினைச்சிக்கோ' என கூறும் வசனத்தை பார்த்து படமாக்கும் போதே, இயக்குனர் என்னிடம் இந்த காட்சியும், வசனமும் மக் களிடம் பேச வைக்கும் என்றார்.
அவர் கூறியது போலவே படம் வெளியானதும் வரவேற்பை பெற்றது. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற வாழ்நாள் ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி. தற்போது படவாய்ப்புகள் அதிகம் வந்தாலும் என்னை அடுத்தகட்டத் திற்கு நகர்த்தும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்.
ரத்தசாட்சி, லவர், குருதி ஆட்டம், மாவீரன் உட்பட பல்வேறு படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.
கதை கேட்டு கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து விட்டால், ஆண்டுகள் கடந்த பின் நாம் திரும்பி பார்க்கும் போது வருந்தக்கூடாது. அது போன்ற படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.
சென்னையை விட்டு எங்கும் செல்லாதவன், தற்போது சூட்டிங்கிற்காக பல்வேறு இடங்களுக்கு செல்வதால் இயற்கையை ரசிக்க முடிந்தது. சூட்டிங் இல்லாத நாட்களில் மலை சார்ந்த இடங்களுக்கு பயணம் செய்து வருகிறேன். மலை அடிவாரத்தில் நிலம் வாங்கி இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ ஆசை உள்ளது. நினைத்த இடத்தை பிடிக்க பொறுமை, விடா முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.