உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: அரசியல் நய்யாண்டி திரைப்படங்களின் ஆணிவேர் “முகமது பின் துக்ளக்”

பிளாஷ்பேக்: அரசியல் நய்யாண்டி திரைப்படங்களின் ஆணிவேர் “முகமது பின் துக்ளக்”


வழக்கறிஞர், நாடக ஆசிரியர், நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்ற பன்முகத் தன்மையோடு அனைவராலும் அடையாளம் காணப்பட்டவர்தான் நடிகர் சோ ராமசாமி. 1963ம் ஆண்டு வெளிவந்த “பார் மகளே பார்” என்ற திரைப்படத்தில் கார் மெக்கானிக் கதாபாத்திரத்தில் தோன்றி, ஒரு திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், ஏராளமான திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை நடிகராக நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்களின் நகைச்சுவையில் அரசியல் கிண்டல், நய்யாண்டி ஆகியவற்றின் நெடி அதிகரிக்க, அதனை சக கலைஞர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் ரசிக்கத் தொடங்கினர். அதன் விளைவுதான் தனது மேடை நாடகங்களில் ஒன்றான “முகமது பின் துக்ளக்” என்ற நாடகத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார் நடிகர் சோ ராமசாமி.

1968ம் ஆண்டு மேடை நாடகமாக முதன் முதலில் அரங்கேறிய இந்நாடகம் அன்றைய மத்திய மற்றும் மாநில அரசுகளைக் குறி வைத்து சர்ச்சைக்குரிய வகையில் எடுக்கப்பட்டிருந்தாலும், நாடகத்திற்கு நல்ல வரவேற்பே கிடைத்திருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு 1971ம் ஆண்டு தனது நாடகக் குழு கலைஞர்களை வைத்தே இந்நாடகத்தைத் திரைப்படமாகவும் எடுக்க முடிவு செய்தார் நடிகர் சோ. “பிரஸ்டீஜ் புரொடக்ஷன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் நாயகனாக நடித்திருந்த நடிகர் சோ, “முகமது பின் துக்ளக்” திரைப்படத்தை முதன் முதலாக இயக்கியும் இருந்தார்.

அரசியல் நய்யாண்டிப் பேசி வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் 'மெல்லிசை மன்னர்' எம் எஸ் விஸ்வநாதன். படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றான “அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை” என்ற பாடலைப் பாட, நாகூர் இ எம் அனிபாவை தேர்ந்தெடுக்க விரும்பினார் எம் எஸ் விஸ்வநாதன். ஆனால் அவர் அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரப் பாடல்களைப் பெருவாரியாக பாடி வந்ததாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபிமானியாக இருந்ததாலும் அவரைப் பாட வைப்பது என்பது இயலாத ஒன்றாக இருந்தது.

இதனால், இந்திப் பின்னணிப் பாடகர் முகமது ரபியைப் பாட வைக்கலாம் என தீர்மானிக்க, அவரும் உடனே வந்து பாட இயலாத நிலை ஏற்பட, படத்தின் இயக்குநரும், நாயகனுமான நடிகர் சோ, எம் எஸ் விஸ்வநாதனையே அந்தப் பாடலைப் பாடும்படி கேட்டுக் கொள்ள, எம் எஸ் விஸ்வநாதனோ முகமது ரபியைப் பாட வைப்பதில் தீவிரம் காட்ட, நடிகர் சோ, சீட்டு எழுதிப் போட்டு யார் பெயர் வருகிறதோ அவரையே பாட வைக்கலாம் என எம் எஸ் விஸ்வநாதனிடம் யோசனை கூற, அதன்படி சீட்டு எழுதிப் போட்டுப் பார்த்ததில் எம் எஸ் விஸ்வநாதன் பெயர் வர, அவரே அந்தப் பாடலைப் பாடினார்.

“முகமது பின் துக்ளக்” என்று இந்தப் படத்தின் பெயரைச் சொன்னாலே, எல்லோரின் நினைவிற்கும் சட்டென வரும் பாடலாக அமைந்த இந்தப்பாடல் பெரும் வெற்றி பெற்றது. இதில் என்ன விசேஷம் என்றால் நடிகர் சோ எழுதிப் போட்ட இரண்டு சீட்டுகளிலும் எம் எஸ் விஸ்வநாதன் பெயரையே எழுதியிருந்ததுதான். இந்த நிகழ்வு, எம் எஸ் விஸ்வநாதன் என்ற அந்த இசை ஆளுமையின் மேல் நடிகர் சோ வைத்திருந்த அளப்பரிய மரியாதையையும், நம்பிக்கையையும் காட்டுவதாக இருந்தது என்றால் அது மிகையன்று. மார்ச் 5, 1971ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று, இன்றளவும் அரசியல் நய்யாண்டித் திரைப்படம் என்றால் ரசிகர்கள் கூறும் முதல் திரைப்படமாக இருப்பது இந்த “முகமது பின் துக்ளக்” என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !