'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை?
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி படமாக அறிவித்த 'ஜனநாயகன்' ஜனவரி 9ம் தேதி ரிலீசாவதாக இருந்தது. ஆனால், படத்துக்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதற்கு எதிராக தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வு, தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்ததுடன், வழக்கின் விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாமல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் படத் தயாரிப்பு நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை எப்போது எனத் தெரியாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகளின் உத்தேச பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், ஜனநாயகன் திரைப்படம் குறித்த மேல்முறையீட்டு வழக்கு வரும் 19ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவித்தனர். பின்னர், சற்று நேரத்தில் 15ம் தேதிக்கே விசாரணைக்கு வரும் என்றும் தெரிவித்தனர். இது உத்தேச பட்டியல் என்பதால் விசாரணை தேதி மாறுபடலாம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.