உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்”

பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்”


தனித்துவமிக்க குரல் வளமும், அழகிய தமிழ் உச்சரிப்போடு கூடிய இயல்பான நடிப்பும் ஒருங்கே அமையப் பெற்று, 1960 மற்றும் 70களில் 'நவரசத் திலகம்' என தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைக்கலைஞர்தான் நடிகர் முத்துராமன். பள்ளிப் பருவத்தின்போதே நாடகத்தின் மீது நாட்டம் அதிகமாகி, அதன் காரணமாக வைரம் நாடகக் கம்பெனியில் இணைந்து, நாடகங்களில் சிறு சிறு வேடமேற்று நடித்து வந்தார்.

பின்னர் சில வருடங்களுக்குப் பின் அங்கிருந்து வெளியேறி, தனது நண்பர்களோடு இணைந்து சொந்தமாக நாடகக் குழு ஒன்றை ஆரம்பித்து, 'நீதிபதி' என்ற நாடகத்தை நடத்தினார். ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் நடத்தி வந்த நாடகக் குழுவிலும் இணைந்து நடித்து, அதன் பின்னர் நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த 'சேவா ஸ்டேஜ்' என்ற நாடகக் கம்பெனியிலும் ஒரு நடிகராக பயணித்து வந்தார். இந்த நிலையில், இதில் நிரந்தரத் தன்மையும், போதிய வருமானமும் இல்லை என தீர்மானித்து, கலை வாழ்வே வேண்டாம் என முடிவெடுத்து, சென்னையை விட்டு கிளம்ப முடிவு செய்திருந்தபோதுதான் அந்த சினிமா வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.

இந்த இடைப்பட்ட காலங்களில் “ரங்கூன் ராதா”, “மாலா ஒரு மங்கல விளக்கு”, “நாலு வேலி நிலம்”, “சகோதரி”, “படிக்காத மேதை”, “அரசிளங்குமரி” போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் இவர் நடித்திருந்தபோதும், ஒரு அங்கீகாரம் பெற்ற நடிகராக அறியப்படாத நிலையே இவரைப் பீடித்திருந்தது. அப்போதுதான் இயக்குநர் சி வி ஸ்ரீதர், “சித்ராலயா” என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அதன் முதல் படமாக அவர் எடுக்க நினைத்த திரைப்படம்தான் “நெஞ்சில் ஓர் ஆலயம்”. முதல் படமே சோகப் படமாக எடுக்க வேண்டாம் என நினைத்த இயக்குநர் ஸ்ரீதர், நகைச்சுவையோடு கூடிய ஒரு காதல் கதையை தர நினைத்து, “சித்ராலயா”வின் முதல் திரைப்படமாக அவர் தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் “தேன் நிலவு”.

கலை வாழ்வே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட நடிகர் முத்துராமனைத் தேடி, ஒரு நாள் 'சித்ராலயா' அலுவலகத்திலிருந்து வந்த ஒருவர், இயக்குநர் ஸ்ரீதர் உங்களை உடனே அழைத்து வரச் சொன்னார் என்ற செய்தியைச் சொல்ல, சில காலங்களுக்கு முன்பு சென்னையில் 'சேவா ஸ்டேஜ்' நாடகக் குழுவினாரால் அரங்கேற்றப்பட்ட 'வடிவேலு வாத்தியார்' என்ற இவர் நடித்திருந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு இயக்குநர் ஸ்ரீதரும், இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனும் வந்திருந்தது நடிகர் முத்துராமனின் நினைவிற்கு வர, உடனே இயக்குநர் ஸ்ரீதரை நேரில் சந்திக்கச் சென்றார். அவரை சந்தித்ததன் விளைவுதான் நடிகர் முத்துராமனுக்குக் கிடைத்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” பட வாய்ப்பு.

படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த கதையின் நாயகி தேவிகாவின் கணவர் வேடத்தில், நடிகர் முத்துராமனை நடிக்க வைத்திருந்ததோடு, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்ற காலத்தால் அழியா ஒரு காவியப் பாடலுக்கும் வாயசைத்து நடிக்கும் நல் வாய்ப்பினையும் தந்திருந்தார் இயக்குநர் ஸ்ரீதர். இதனைத் தொடர்ந்து அடுத்து வந்த இயக்குநர் ஸ்ரீதரின் முதல் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமும், முதல் முழுநீள ஈஸ்ட்மென் வண்ணத் திரைப்படமுமான “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தின் நாயகர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றுத் தந்து, பின்னாளில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக உயர்வு பெற காரணமாகவும் அமைந்ததோடு, நடிகர் முத்துராமனின் கலையுலகப் பயணத்தில் ஒரு மாபெரும் திருப்பத்தைத் தந்த திரைப்படமாகவும் அமைந்ததுதான் இந்த “நெஞ்சில ஓர் ஆலயம்”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !