அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல்
அனில் ரவிப்புடி இயக்கத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா நடித்து இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்த தெலுங்கப் படம் 'மன ஷங்கர் வரபிரசாத் காரு'. இப்படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த 'தளபதி' படத்தின் சூப்பர்ஹிட் பாடலான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலைப் பயன்படுத்தி உள்ளார்கள்.
அப்பாடலைப் பயன்படுத்த அவரிடம் அனுமதி பெற்றீர்களா இல்லையா என்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்நிலையில் படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
“படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா இடையிலான ஒரு காதல் காட்சியில் அப்பாடலைப் பயன்படுத்தி இருந்தோம். அது அற்புதமாக அமைந்தது. இளையராஜா சாரைப் பற்றி ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். அவர் வழக்கு போடுவார் என்றெல்லாம் சொல்வார்கள்.
எல்லாவற்றிற்கும் ஒரு முறை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மேதையிடம் சென்று, 'சார், உங்க பாட்டை என் படத்துல பயன்படுத்த அனுமதி கொடுக்கணும்னு,” கேட்டால் அவர் மகிழ்ச்சியா கண்டிப்பா கொடுப்பாரு. என்னோட தயாரிப்பாளர்கள் அவரைப் போய்ப் பார்த்து, சிரஞ்சீவ சார் சினிமால, இந்தப் பாட்டைப் பயன்படுத்த அனுமதி வேணும்னு கேட்டாங்க, எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டாரு. மத்த படங்கள்ல என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. அவர் கிட்ட போய் முறையா கேட்டோம், அனுமதி கொடுத்தாரு,” என்று தெரிவித்துள்ளார்.